வயதானவர்கள், ஆதரவற்றவர்களுக்காக திருமண மண்டபத்தில் தயாராகும் உணவு: நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாடு

நாகர்கோவில் : நாகர்கோவிலில் உணவின்றி தவிப்பவர்களுக்கு வழங்க, மாநகராட்சி சார்பில் திருமண மண்டபத்தில் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஊடரங்கு உத்தரவு உள்ளதால் சாலைகளில் ஆதரவின்றி திரிபவர்களுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. பல்வேறு தன்னார்வலர்கள் அவர்களாகவே முன் வந்து உணவு பொட்டலங்களை ஆங்காங்கே அமர்ந்திருப்பவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆனால் இவை போதுமானதாக இல்லை. நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் முக்கிய கடை வீதிகளில் ஏராளமானவர்கள் உள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வெளியேயும் பலர் ஆதரவின்றி தவிக்கிறார்கள். இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் இயங்கி வந்த அம்மா உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கும் உணவு கிடைக்காத நிலை உள்ளது. இது மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து பிழைப்புக்காக வந்து தற்போது தொழில் எதுவும் இல்லாமல் உணவின்றி பலர் தவிக்கிறார்கள். வீடுகளில் வயதான நிலையில் தனித்து இருப்பவர்களும் உணவு இல்லாமல் உள்ளனர்.

இவர்களுக்கு உணவு வழங்கும் வகையில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் தன்னார்வலர்கள் உதவியுடன் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் மற்றும் திருமண மண்டபங்களில் உணவு தயாரிக்கப்படுகிறது. அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பேருக்கு காலை, மதியம், இரவு என 3 வேளை உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட வேண்டும். அனைவரும் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின் தான் பார்சல்களில் உணவை வைக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் பலர் இந்த உணவு தயாரிப்பு பணியிலும், சப்ளை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். காலையில் 4 இட்லியும், மதியம் தயிர் சாதம் அல்லது சாம்பார் சாதம், இரவில் 4 இட்லிகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories: