மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடுங்க; கொரோனா தடுப்பு பணிக்கு எம்.பி.க்கள் சம்பளம் 30% குறைப்பிற்கு சோனியா காந்தி ஆதரவு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாள் முடக்கம் கடந்த மாதம் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்பின் பல தரப்பினருடன் பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. முடக்கத்துக்குப்பின் நேற்று முதல் முறையாக காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இவ்வாறு காணொளி காட்சி மூலம் அமைச்சரவை கூட்டம் நடப்பது இதுவே முதல் முறை.

இதில், கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்தும் வகையில் எம்.பி.க்கள் சம்பளம், படிகள், மற்றும் ஓய்வூதியத்தை ஓராண்டு காலத்துக்கு 30 சதவீதம் குறைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மத்திய  அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சி  நிதியையும், 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டுகளுக்கு தற்காலிகமாக  நிறுத்தவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதற்கிடையே, எம்.பி.க்களை போன்று ஓராண்டுக்கு தன்னுடைய சம்பளத்திலும் 30 சதவீதத்தை பிடித்துக் கொண்டு மத்திய அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பும்படி நாடாளுமன்ற விவகாரத்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக மக்களவை  சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை 30% குறைக்க மத்திய அமைச்சரவை முடிவுக்கு ஆதரவு அளித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட பல நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி பரிந்துரைத்தார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகவும் தேவையான நிதிகளை திசை திருப்ப பயன்படுத்தக்கூடிய சிக்கன நடவடிக்கைகள் காலத்தின் தேவை. மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த தொகை புதிய மருத்துவமனை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு 7,880 கோடி கிடைக்கும்:

எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தின் மூலம் ஒவ்வொரு எம்.பி.க்களும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில், பள்ளிக் கட்டிடம், தண்ணீர் தொட்டி, ஆழ்துளை  கிணறு, பஸ் நிறுத்த நிழற்குடை உட்பட பல வசதிகளை எம்.பி.க்கள் செய்து கொடுப்பர். தற்போது இந்தப் பணம் 2 ஆண்டு காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளதால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு எம்.பி.க்களால் தங்கள் தொகுதியில் எந்த வசதிகளையும்  மக்களுக்கு செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எம்.பிக்கள். தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்பட்டுள்ளதால்,  (மக்களவையில் 543, மாநிலங்களவையில் 245) அரசுக்கு மொத்தம் 7,880 கோடி கிடைக்கும்.

Related Stories: