முறை தவறிய காதலை கண்டித்ததால் காதலனுடன் சேர்ந்து தங்கையே அக்காவை கொன்ற கொடூரம்: இன்ஜி. மாணவி மர்ம சாவில் திருப்பம்

நாமக்கல்: நாமக்கல்லில் முறை தவறிய காதலை கண்டித்ததால், இன்ஜினியரிங் மாணவியை  கழுத்தை நெரித்து கொலை  செய்த தங்கை மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் அருகே, கொசவம்பட்டி தேவேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் மோனிஷா(18). நாமக்கல் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வந்தார்.  கடந்த 4ம்தேதி, வீட்டில் தனியாக இருந்த மோனிஷா, தனது இடது கையில் பிளேடால் அறுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து, நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதனிடையே, மோனிஷாவின் உடல்  நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Advertising
Advertising

இதில், கழுத்தை நெரித்ததால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மோனிஷாவை அவரது 17 வயது தங்கையான பிளஸ்2 மாணவி, காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, மோனிஷாவின் தங்கை மற்றும் அவரது காதலனான ராகுல் (19) ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. மோனிஷாவின் பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டாக அண்ணன் உறவு முறை கொண்ட ராகுலுடன், மோனிஷாவின் தங்கை நெருங்கி பழகி காதலித்து வந்துள்ளார். இது இரண்டு குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. இதை மோனிஷா மற்றும் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

ஆனால், மோனிஷாவின் தங்கை இதனை கேட்கவில்லை. இதனால், கடந்த ஒரு ஆண்டாக குடும்பத்தினர் யாரும் அவரிடம் பேசாமல், தனிமையில் ஒதுக்கி வைத்துள்ளனர். குடும்பத்தினர் தன்னை வெறுக்க, அக்காதான் காரணம் என நினைத்து, அக்காவை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்த இருவருக்குமிடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பக்கத்து தெருவில் வசிக்கும் காதலன் ராகுலுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து மோனிஷாவை தாக்கி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர், மோனிஷா செய்து கொண்டது போல் சித்தரிக்க, பிளேடால் அவரது கையை அறுத்துள்ளனர். ரத்தம் வெளியேறியதும், அவரது காதலன் அங்கிருந்து தப்பியோடி விட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.  உடன் பிறந்த சகோதரியை காதலனுடன் சேர்ந்து, தங்கையே தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: