×

கொரோனா பரிசோதனையில் தமிழகம் பின்தங்கி இருக்கிறது: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: கொரோனா பரிசோதனையில் தமிழகம் பின்தங்கி இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:  இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து தமிழகம் கொரோனா நோயால் கடும் பாதிப்பிற்கு உள்ளாயிருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வரை 4612 பேருக்கு தான் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் செயற்கை சுவாச கருவிகள் 3371 தான் உள்ளன. மத்திய அரசை மருத்துவ கருவிகள் வாங்க ரூபாய் 3000 கோடி கேட்டதில் இதுவரை எந்த பதிலும் இல்லை.

தமிழகத்தை விட கேரள மாநிலத்தில் அதிக அளவு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் 10 லட்சம் மக்கள் தொகையில் 38 பேருக்கு தான் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் கேரளாவில் 220 பேருக்கு செய்யப்படுகிறது. தேசிய சராசரியாக 42 பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. ஆனால் தேசிய சராசரியை விடகுறைவாக 38 பேருக்கு செய்யப்படுவது தமிழகம் எந்த அளவுக்கு கொரோனா பரிசோதனையில் பின்தங்கி இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. தமிழகத்தில் 11 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவமனைகளிலும் ஆகமொத்தம் 17 பரிசோதனை ஆய்வகங்கள் தான் இருக்கின்றன.

இவை சென்னையை சுற்றிலும் 7 அமைந்திருக்கின்றன. இதிலும் கிராமப்புற மக்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய அரசின் அனுமதியோடு பரிசோதனை கருவிகள்,  சுவாசக்கருவிகள், முகக்கவசங்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உடனடியாக பெறுவதற்கு தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். தமிழக மக்களை அச்சுறுத்தி, பீதியில் ஆழ்த்தி வருகிற கொரோனா தடுப்பு சிகிச்சையில்  சில குறைபாடுகள் இருப்பதை ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற முறையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

Tags : Tamil Nadu ,KS Alagiri ,Congress , Corona, Tamil Nadu, Congress leader, KS Alagiri
× RELATED சொல்லிட்டாங்க...