திட்டமிடப்படாத ஊரடங்கால் மக்கள் பாதிப்பு: உங்கள் தொலைநோக்கு பார்வை தவறிவிட்டது: பிரதமருக்கு கமல் கடிதம்

சென்னை: பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  கடந்த 23ம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதினேன். அதில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இதற்கு அடுத்த நாளே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பின் போது எப்படி கால அவகாசம் கொடுக்கப்படவில்லையோ, அதுபோல் ஊரடங்கு உத்தரவிற்கும் கொடுக்கப்படவில்லை. நீங்கள் இந்த நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

பணமதிப்பிழப்பின் போது எப்படி ஏழைகள் தங்களது சேமிப்பையும் வாழ்வாதாரத்தையும் இழந்தனரோ அதேபோல் இந்த முறை திட்டமிடப்படாத லாக்டவுனால் தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பால்கனிகளில் விளக்கு ஏற்றுமாறு நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ஏழைகளோ அடுத்த வேளை உணவுக்கு எண்ணெய் இல்லாமல் போராடுகிறார்கள்.  தினக்கூலி தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள், புலம்பெயர்ந்த மக்கள் என லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் ஏழைகள் பசி, சோர்வு, வறுமையால் வாட வழி வகை செய்து வருகிறோம்.

ஏழை மக்களை புறக்கணிக்கும் அரசுகள் கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் 4 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என இந்திய மக்களுக்கு நீங்கள் உத்தரவிட்டீர்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 4 மாதங்கள் முழுமையாக இருந்த நிலையில், நீங்கள் வெறும் 4 மணி நேரம் மட்டுமே மக்களுக்கு நேரம் கொடுத்தீர்கள். தொலைநோக்கு பார்வை உள்ள தலைவர்கள் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதற்கு முன்னரே தீர்வு காண நடவடிக்கை எடுப்பர். உங்கள் தொலைநோக்கு பார்வை தவறிவிட்டது. இதனால் நான் தேசத்திற்கு விரோதமானவன் என்று யாராவது கூறினால் கூறட்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Related Stories: