கடந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை கடும் சரிவு: காஸ் விற்பனை மட்டும் உயர்ந்தது

புதுடெல்லி: தேவை குறைந்ததால், கடந்த மாதத்தில் பெட்ரோல் விற்பனை 17.6 சதவீதம், டீசல் விற்பனை 26 சதவீதம் சரிந்துள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு முன்னதாகவே போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் எரிபொருள் தேவை கணிசமாக குறைந்துள்ளது.  கடந்த மார்ச் மாதத்தில் 1.943 மில்லியன் டன் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 17.6 சதவீதம் சரிவு. விமான பெட்ரோல் தேவை 31.6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம் விமான பெட்ரோல்  4,63,000 டன்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

 இதுபோல், பொது போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் டீசல் விற்பனை கடந்த மாதத்தில் 25.9 சதவீதம் குறைந்து, 4.982 மில்லியன் டன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.  இருப்பினும், சமையல் காஸ் விற்பனை மட்டுமே கடந்த மாதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 2.286 மில்லியன் டன் சமையல் காஸ் விற்பனையாகியுள்ளது. இது முந்தைய ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.9 சதவீதம் சரிவு. இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகிய நிறுவனங்களின் கடந்த மாத விற்பனை விவரங்களின்படி மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் பெட்ரோலியம் நிறுவனங்களின் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை டீசல் விற்பனை 1.1 சதவீதம் உயர்ந்திருந்தது. பெட்ரோல் விற்பனை 8.2 சதவீதம் அதிகரித்திருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த மாதம்தான் பெட்ரோல் விற்பனை சரிவை சந்தித்துள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு மாதமும் சரிவு தொடரும்

நடப்பு மாதத்தில், முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விற்பனையான மூன்றில் ஒரு பங்கு பெட்ரோல் டீசல்தான் இதுவரை விற்பனையாகியுள்ளன என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மாதமும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: