அடுத்த வேளை உணவுக்கே எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கேற்றுவார்கள்?....மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்

சென்னை: இந்தியாவில் முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம் அனுப்பியுள்ளார். ஊரடங்கு அமல்படுத்தும்போது வெறும் 4 மணி நேரம் மட்டுமே மக்களுக்கு அவகாசம் தரப்பட்டது என்றும், பண மதிப்பிழப்பின் நடந்த தவறு இப்போதும் பெரிய அளவில் நடக்கிறது என குறிப்பிட்டு இருந்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 571 பேருக்கு தொற்று பாதிப்புடன் இந்தியளவில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் குணமடைந்துள்ளனர்.  

இந்நிலையில் கொரோனா குறித்து நடிகர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறுகையில், இந்த கடிதத்தை ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் அதே சமயம் நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன். முதலில் உங்களுக்கு கடந்த 23-ஆம் தேதி கடிதம் எழுதினேன். அதில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இதற்கு அடுத்த நாளே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பின் போது எப்படி கால அவகாசம் கொடுக்கப்படவில்லையோ அது போல் ஊரடங்கு உத்தரவிற்கும் கொடுக்கப்படவில்லை.

.

மேலும் இந்த நெருக்கடியான சமயத்தில் 1.4 பில்லியன் மக்கள் இன்று வரை உங்களை நம்பி உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறார்கள். ஒரு தலைவர் சொன்னவுடன் இத்தனை கோடி மக்கள் கேட்கிறார்கள் என்றால் அந்த வாய்ப்பு உங்களை தவிர உலகில் வேறு எந்த தலைவருக்கும் இல்லை. நீங்கள் சொன்னால் செய்கிறார்கள். கொரோனாவை ஒழிக்க இரவு பகல் பாராமல் பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு கை தட்டுங்கள் என்றவுடன் அனைவரும் அதை செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பணமதிப்பிழப்பின் போது நடந்த அதே தவறு இப்போதும் நடக்கிறதோ என்ற மிகப் பெரிய அச்சுறுத்தல் எனக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த வேளை உணவுக்கே எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கேற்றுவார்கள்? என கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: