அமெரிக்காவில் புலிக்கு கொரோனா எதிரொலி: உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு

டெல்லி: உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை சின்னாபின்னமாக்கியுள்ளது. கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றது. ஆனால் மனிதனை தாக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டன.

இதற்கிடையே, அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் இருக்கும் புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வந்த பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விலங்குகளுக்கு பரவாது என்ற கூற்று பொய்யாக்கப்படுள்ளது. நடியா எனப்படும் அந்த புலி வறட்டு இருமல் மற்றும் பசியின்மையால் அவதிப்பட்டு வந்ததை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், அந்த புலியின் வளர்ப்பாளருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறி இருந்ததாகவும், அவரிடம் இருந்து புலிக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, அங்குள்ள மேலும் 3 புலிகள் மற்றும் 3 ஆப்ரிக்க சிங்கங்களுக்கும் வறட்டு இருமல் ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா வனஉயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று எதிரொலி காரணமாக உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்க இந்தியாவில் உள்ள வன உயிரியல் பூங்காகளுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய்வாய்ப்பட்ட விலங்குகளை தனிமையில் வைத்து கண்காணிக்கவும், நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் ரத்த மாதிரிகளை உடனடியாக ஆய்வகங்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: