மகாராஷ்டிராவில் மேலும் 33 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதையும் கொரோனா தன் கோரப்பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் சமூக விலகலை கடைபிடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் வெளியே செல்ல அங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மகாராஷ்டிராவில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய சுகாதாரத்துறை இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் நேற்று வரை 748 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 33 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் 781-ஆக அதிகரித்துள்ளது.

புனேவில் 19 பேர், மும்பையில் 11 பேர் சதரா, அகமெத்நகர் மற்றும் பல்கர் மாவட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 33 பேருக்கு கொரோனா புதிதாக தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: