ஏப். 10 முதல் ரேபிட் டெஸ்ட் மூலம் கொரோனா பரிசோதனை; சமூக இடைவெளியை கடைபிடிங்க: பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 571 பேருக்கு தொற்று பாதிப்புடன் இந்தியளவில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் குணமடைந்துள்ளனர்.  இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, நோயின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வருகிறது. வெளிநாடு  சென்று வந்தவர்கள் தாங்களாகவே பரிசோதனைக்கு முன்வர வேண்டும். டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களும் தாமாக பரிசோதனை செய்ய முன்வர வேண்டும் என்றார். கொரோனா நோயின் தீவிரத்தை உணர்ந்து மக்கள்  சமூகவிலகலை கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் 1,848 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் விமான நிலையங்களில் 2 லட்சம்  பயணிகள் கண்காணிப்பில் உள்ளனர்.

சென்னையில் மக்கள் கூட்டத்தை குறைக்க நடமாடும் காய்கறி கடை ஏற்படுத்தப்படும். நடமாடும் காய்கறி கடை அமைக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு வீடு தேடி  அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் 17 கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. அனுமதி கிடைத்ததும் தமிழகத்தில் 38 ஆய்வகங்கள் மூலம் பரிசோதனை நடத்தப்படும். மேலும் தமிழகத்தில் 21 கொரோனா பரிசோதனை மையத்துக்கு அனுமதி கோராப்பட்டுள்ளது. 21 புதிய பரிசோதனை மையங்களுக்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்றார்.

கொரோனாவை பரிசோதிக்கும் ரேபிட் டெஸ்ட் கருவி ஏப்ரல் 9-ம் தேதி தமிழகத்துக்கு வந்துசேரும். ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் அரைமணி நேரத்தில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளலாம். ஏப்ரல் 10-ம் தேதி முதல் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். 1 லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு உதவித்தொகை அறிவித்தார். மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.500 கோடி வழங்கி உள்ளது. பல்வேறு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை.  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் என்றார். முடிதிருத்துவோர், சலவையர், பனை தொழிலாளர், கைவினைத் தொழிலாளர், கைத்தறி , பட்டு நெசவாளர், பொற்கொல்லருக்கு ரூ.1000  உதவித்தொகை வழங்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

Related Stories: