×

தார்களை வெட்ட கூலி ஆட்கள் வராததால் மரத்திலேயே வீணாகும் வாழைப்பழங்கள்: விவசாயிகள் கவலை

குளித்தலை: தார்களை வெட்ட கூலி ஆட்கள் வராததால் மரத்திலேயே வாழைப்பழங்கள் பழுத்து தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மாயனூர் கதவனையில் இருந்து தென் கரைவாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் 1.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதில் 75 சதவீதம் வாழை பயிரிடப்படுகிறது அதில் பூவன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, நேந்திரம் உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன் வறட்சியால் தண்ணீரின்றி வாழை விவசாயிகள் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கஜா புயலில் 90 சதவீதம் வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் வாழை மரங்களின் வாழைத்தார்களை வெட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசு ஊரடங்கு உத்தரவால் கூலி தொழிலாளிகளும் வரமுடியாத சூழ்நிலையில் வாழைத்தார்களை வெட்ட முடியவில்லை.மேலும் வாழைத்தார்களை வாகனங்களில் வைத்து வேறு இடங்களுக்கு செல்லவே முடியாத சூழ்நிலையில் லட்சக்கணக்கான வாழைத்தார்கள் மரத்திலேயே பழுத்து விடுகின்றன. மேலும் வியாபாரிகள் குறைந்த விலைக்கே கேட்பதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு, ஊரடங்கு உத்தரவால் விவசாய இடுபொருள்கள் கொண்டு செல்வதில் உள்ள சிரமங்களைக் கண்டு அந்த விவசாயிகள் உற்பத்திப் பொருளை வெளி சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து செல்ல உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த 2 நாட்களாக குளித்தலை வட்டாரத்திலுள்ள விவசாயிகள் வாழைத்தாரை வெட்டி வெளிசந்தைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளனர். இதனால் வாழைத்தார்கள் வெட்டப்பட்டு சிறிய வாகனம் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.இருந்தாலும் வாழை விவசாயிகள் போதிய விலை இல்லாமல் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் இந்த தடை உத்தரவு காலத்தில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ 50ஆயிரம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Wasting, bananas ,farmers concern
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை