ஆலடிப்பட்டி கொள்முதல் நிலையம் மூடல் நெல்லை அருகே 5 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம்: மழை அச்சத்தில் விவசாயிகள் கவலை

நெல்லை:  நெல்லை அருகே ஆலடிப்பட்டி கொள்முதல் நிலையம் திறக்கப்படாத காரணத்தால் சுமார் 5 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளன. கங்கை கொண்டான் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்து நெல் மூடைகளை விற்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.கடந்தாண்டு வேளாண்மைக்கு கை கொடுத்த பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிசான சாகுபடி செழிப்பாக உள்ளது. அறுவடையில் மேனி போன நிலையில், பல விவசாயிகள் நெல் மூடைகளை விற்பனை செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். பிசான சாகுபடிக்கான அறுவடை காலத்தில் கொரோனா நோய் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அறுவடையை நடத்தியும், நெல் மூடைகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர்.

வேளாண் பணிகளுக்கு எவ்வித தடையும் இல்லை என அரசு அறிவித்த போதிலும், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல நெல் அரவை ஆலைகள் தற்போது இயங்கவில்லை. இதனால் விவசாயிகளிடம் இருந்து நெல் மூடைகளை ஆலை நிர்வாகங்கள் பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றன. வேறு வழியின்றி நெல் கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் நாடி சென்றால், அவையும் நெல் மூடைகளை எடுப்பதில்லை.

நெல்லை அருகே ஆலடிப்பட்டி பகுதியில் தற்போது சுமார் 5 ஆயிரம் மூடைகள் வயல் ஓரங்களில் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்காக காத்திருக்கின்றன. கங்கை கொண்டான் சுற்றுவட்டாரத்தில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் அமோகமாக விளைச்சல் கண்டுள்ளது. கங்கை கொண்டானை சுற்றியுள்ள துறையூர், ஆலடிப்பட்டி, வடகரை, கைலாசபுரம், மடத்துப்பட்டி, கோட்டையடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், அறுவடை முடிந்த பின்னர் தங்கள் நெல் மூடைகளை என்ன செய்வதென்றே தெரியாமல் திண்டாடி வருகின்றனர். ஆலடிப்பட்டியில் காணப்படும் நெல் கொள்முதல் நிலையம், சமீபகாலமாக வாரத்தில் ஒருநாள் அல்லது 10 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அங்கு நெல் மூடைகளை வைக்க வழியில்லை. கொரோனா தாக்கம் காரணமாக வயல்களில் இருந்து மூடைகளை எடுத்து செல்ல வியாபாரிகளும் தயக்கம் காட்டுகின்றனர். அப்படியே வியாபாரிகள் நெல் மூடைகளை விலை பேசினால் 75 கிலோ நெல் மூடைக்கு ரூ.1100 என விலை நிர்ணயம் செய்கின்றனர். வியாபாரிகள் குறைந்த விலை கேட்பதால், விவசாயிகள் அவற்றை விற்க தயங்குகின்றனர்.

இதுகுறித்து ஆலடிப்பட்டி விவசாயிகள் கூறுகையில், ‘‘இவ்வாண்டு அறுவடை முடிந்து நெல் விளைச்சல் நன்கு உள்ளது. ஆனால் நெல் மூடைகளை உடனடியாக விற்க முடியவில்லை. கொரோனாவை காரணம் காட்டி வியாபாரிகள் வயல் பக்கம் தலைக்காட்ட அச்சப்படுகின்றனர். எங்கள் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையம் முறையாக திறப்பதில்லை. கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோ ரூ.19.5 என எடுத்து கொள்கின்றனர். எங்கள் பகுதி விவசாயிகள் மட்டுமே சுமார் 5 ஆயிரம் மூடைகளை வைத்து கொண்டு விற்பனைக்காக காத்திருக்கிறோம். மேலும் பலர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளனர். மழை வேறு எங்களை பயமுறுத்தி கொண்டிருக்கிறது. நெல் மூடைகளின் மீது குறைந்த அளவு மழை பெய்தால் கூட ேபாதும். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடும். எனவே அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, எங்கள் நெல் மூடைகளை விற்பனை செய்திட வழிவகை செய்ய வேண்டும்.’’ என்றனர்.

Related Stories: