கொரோனாவால் களையிழந்த பங்குனி உத்திர திருவிழா: குல தெய்வங்களை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு

நெல்லை:  தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா இன்று நடைபெற வேண்டும்.  தமிழர்கள் தங்களுக்குரிய குலதெய்வங்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் மற்றும் நேர்த்திக் கடன்கள் இருந்தால் அதையும் செலுத்தி வழிபடுவது வழக்கம்.தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குலதெய்வ கோயில்கள் உள்ளன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சிறிய குக்கிராமங்களிலும் குலதெய்வக் கோயில்கள் உள்ளன. மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்தாலும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக முன்னதாகவே திட்டமிட்டு, அவர்களது குலதெய்வக் கோயில்கள் இருக்கும் கிராமங்களுக்கு குடும்பத்தோடு வருவது வழக்கம்.கோயில்களிலும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெள்ளையடிப்பது, சீர்படுத்துதல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இதனால் வழிபாட்டுத் தலங்களும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளன. இதனால் கோயில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் வழக்கமான பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் மட்டும் அன்றாடம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா வழக்கமான முறைப்படி நடத்தப்படவில்லை என அறிவிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக குலதெய்வ கோயில்கள் களையிழந்து காணப்படுகின்றன. பஸ், ரயில்கள் ஓடாததால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பக்தர்கள் வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. விழாவையொட்டி கோயில்களில் நடைபெறும் முன்னேற்பாடு நடவடிக்கைகளும் பல கோயில்களில் செய்யப்படவில்லை. சில சாஸ்தா கோயில்களை உள்ளூர் மக்கள் சுத்தப்படுத்தி வைத்துள்ளனர். ஆயினும் கூட்டம் கூடுவதற்கு அனுமதியில்லை என்பதால், இந்த ஆண்டு சாஸ்தா கோயில்களில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு வழக்கமான பக்தர்கள் கூட்டம் வருவதற்கு வாய்ப்பில்லை.கோயிலுக்கு இன்று வர முடியாத பலர், தங்கள் வீடுகளிலேயே சாஸ்தாவை நினைத்து வழிபடவும், தடையுத்தரவு நீங்கிய பின்னர், சாஸ்தா கோயில்களில் குடும்பத்தோடு சென்று வழிபடவும் திட்டமிட்டுள்ளனர்.

வீட்டிலேயே வழிபாடு

இன்றைய தினம் குல தெய்வ கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் மேற்கொள்ள வேண்டிய பரிகாரம் என்ன என்பது குறித்து நெல்லை ஜோதிடர் சங்கர சுப்பிரமணியன் கூறியதாவது: இன்று தங்களது குல தெய்வ கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலையில், வீட்டிலேயே குளித்து முடித்து விட்டு பூஜையறையில், தேங்காய் உடைத்து 2 மூடிகளிலும் தலா 4 திரிகளை இட்டு அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். மேலும் சுத்தமான மஞ்சள் துணியில் சாஸ்தாவுக்கு வேண்டிக் கொண்ட காணிக்கையை முடிந்து விளக்கு முன் வைத்து மனதார வழிபட வேண்டும். இதைத் தொடர்ந்து சித்திரை, வைகாசி தமிழ் மாதங்களில் வரும் உத்திர நட்சத்திரத்தில் தங்கள் சாஸ்தா கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு மஞ்சள் துணியில் முடிந்து வைத்த காணிக்கையை ெசலுத்தி வழிபடலாம். இதனால் சாஸ்தாவின் அருளும், துணையும் நம்முடன் இருக்கும்’’ என்றார்.

Related Stories: