மக்கள் நடமாட்டமின்றி அமைதியான சூழலில் புதுவை ஊசுட்டேரி..: கரையிலேயே நீந்திக்களிக்கும் பறவைகள்..

புதுச்சேரி: புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஊசுட்டேரியும் ஒன்று. புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப்பகுதிகளில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் நீண்டு கிடக்கும் இந்த ஏரி, மழைக்காலங்களில் நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும். இங்கு பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதால், இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மீன்களை பிடிக்க அனுமதியில்லை. மீன்கள் வளர்ந்து பறவைகளுக்கு இரையாகின்றன. மேலும் ஏரியையொட்டி வனப்பகுதி போல இயற்கையான சூழல் நிலவுவதால், இங்கு முள்ளம்பன்றி, முயல், காட்டுப்பூனை, உடும்பு, கீரிப்பிள்ளை உள்ளிட்ட உயிரினங்களும் அதிகளவில் உள்ளன. இதனிடையே ஊசுட்டேரியின் இயற்கை அழகு பார்ப்பவர்களை பரவசப்படுத்துவதால், இங்கு புதுச்சேரி அரசு சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டு படகு சவாரி இயக்கப்படுகிறது. இதனால் புதுச்சேரி மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதிகளை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் இங்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வரும் பறவையினங்களை பார்த்து ரசித்துக்கொண்டே படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஊசுட்டேரிக்கு சுற்றுலா பயணிகள் வருவது தடுக்கப்பட்டுள்ளது. படகு சவாரி நிறுத்தப்பட்டு, ஏரிக்கு செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊசுட்டேரியை ஒட்டியுள்ள சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்

படுகிறது. இதனால் ஊசுட்டேரியில் மிக அமைதியான சூழல் நிலவுகிறது. இந்த சூழலால் ஏரிக்கு வரும் பறவைகள் மிக சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. படகு சவாரி இயக்கப்பட்ட கரையோர பகுதிகளில் பறவைகள் கூட்டமாக நீந்திக்களிக்கின்றன. மேலும் ஏரியையொட்டிய புதர்ப்பகுதிகளில் முள்ளம்பன்றிகள், முயல்கள் உள்ளிட்ட விலங்கினங்களும் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ஊசுட்டேரியில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் தண்ணீரும் தெளிந்து காணப்படுகின்றன. பறவைகள் மற்றும் விலங்கினங்கள் எந்த துன்புறுத்தலுமின்றி சுதந்திரமாக திரிகின்றன. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், இதேபோல ஏரியில் அமைதியான சூழல் நிலவ வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிக்கரைகளில் மது அருந்த வருவோர், தேவையின்றி சுற்றுவோர்களை கண்காணித்து விரட்ட வேண்டும் என்கின்றனர்.

Related Stories: