ஊரடங்கை மீறி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கூட்டிய பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

மும்பை : நாட்டிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏ ஒருவர் ஊரடங்கை மீறி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கூட்டியதாக புகார் எழுந்துள்ளது. மகாராஷ்டிரத்தின் வார்தாவில் உள்ள ஆர்வி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாதாராவ் கெச்சே பிறந்த நாளை முன்னிட்டு தமது வீட்டில் உள்ள ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருட்களை விநியோகம் செய்துள்ளார்.

இவற்றை பெற நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரது வீட்டின் முன்பு திரண்டுள்ளனர். அவர்கள் எம்எல்ஏ வழங்கிய இலவச பொருட்களை பெற ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே விதிமீறல் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொற்று நோய் தடுப்புச் சட்ட பிரிவுகளில் பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்எல்ஏ, தமது பிறந்தநாளுக்கு யாரையும் அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது அரசியல் எதிரிகளின் பொய் புகார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: