21 நாளா... தாங்க முடியாதுடா சாமி...டாஸ்மாக் கடையை உடைத்து 3,908 மது பாட்டில்கள் திருட்டு

திண்டுக்கல்:  திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடையை உடைத்து 3 ஆயிரத்து 908 மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ரெகுலர் குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் மண்டை காய்ந்து வருகின்றனர். வீதிகள் வெறிச்சோடி கிடப்பதால் ஆங்காங்கே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

திண்டுக்கல், சத்திரம் தெருவில் 1319ம் எண் டாஸ்மாக் கடை உள்ளது. 144 தடையால் இந்த கடை பூட்டி கிடக்கிறது. கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் கடை ஊழியர்களுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கடை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே 3,908 மதுபாட்டில்களை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: