×

வீடுகளில் தீபம் ஏற்றும் பிரதமர் மோடியின் அழைப்புக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை

சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று மின் விளக்குகளை அணைத்து  அகல் விளக்குகள், டார்ச் ஒளிர செய்வதற்கு தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தில் மக்களின் பலத்தை காட்டும் வகையில் ஏப்ரல் 4ம் தேதி இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து விட்டு வாசல் மற்றும் பால்கனியில் 9 நிமிடங்கள் வரை விளக்கு அல்லது செல்போனில் டார்ச் ஒளிரச் செய்யும்படி நாட்டு மக்களுக்கு கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும், மோடியின் உரையில் எதிர்காலத்துக்கான தொலைநோக்கு இல்லை என்றும் குற்றம்சாட்டினர். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கேலி, கிண்டலுக்கும் ஆளானது.

 இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் எடப்பாடி, பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நடிகர் ரஜினி காந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து விட்டு, வீட்டு வாசலில் அகல் விளக்குகளை ஏற்றினர். இதேபோல் புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் விளக்கேற்றினர்.

ஆனால்,  தமிழகம் முழுவதும் மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்குகள், டார்ச் ஓளிர செய்வதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பில்லை. குறிப்பாக, சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாநகர் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ஒரு சிலர் மட்டுமே  மின் விளக்குகளை அணைத்தனர்.  தெரு விளக்குகள் எங்கும் அணைக்கப்படவில்லை. பல இடங்களில் வீடுகளில் மின் விளக்குகளை ஒளிர விட்டிருந்தனர். மேலும், பொதுமக்கள் வழக்கம் போல் தங்களது அன்றாட பணிகளை செய்து கொண்டிருந்தனர்.


Tags : Narendra Modi ,light houses ,Tamil Nadu , Prime Minister, Narendra Modi's invitation, light houses, Tamil Nadu , welcome
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!