×

ஊரடங்கு மட்டும் போதாது; அதிக சோதனை வேண்டும்; கொரோனா குறித்து எதிர்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்ததற்கு ப.சிதம்பரம் வரவேற்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றும்படியும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பல்வேறு உயர்நிலை ஆலோசனைகளை காணொளி காட்சி மற்றும் தொலைபேசி மூலம் நடத்தி வருகிறார்.

இதன்படி, மாநில முதல்வர்களுடன் அவர் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, நேற்று அவர், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை நேற்று காலை தொலைபேசியில் அழைத்து அவர் பேசினார்.  கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பது பற்றி இத்தலைவர்கள் தங்களுடைய ஆலோசனையை பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும், உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடனும் தொலைபேசியில் அழைத்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், எதிர்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்து ஆலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். இந்தியா முழுவதும் மிகப்பரவலாக மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை செய்ய வேண்டும், இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும்.

ஊரடங்கு மட்டும் போதாது; அதிக சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று வல்லலுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா இந்த வாரம் மிக முக்கியமான 2-வது வார காலத்திற்குள் நுழைகிறது. கோரோனா பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசின் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருகின்றனர். அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி இருந்தால் அது ஆக்கப்பூர்வமான விமர்சனமே என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Chidambaram ,consultation ,opposition leaders ,Modi ,Corona , Curfew is not enough; Need more testing; PM Chidambaram welcomes PM Modi's consultation with opposition leaders on Corona
× RELATED கொரோனா ஊரடங்கு காலத்தில்; அரசு...