×

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 14ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். தமிழகத்திலும் கொரோனா நோய் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. 144 தடை உத்தரவு காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்காக சிறிய மளிகை, காய்கறி, மருந்து கடைகள், பால் விற்பனை, பத்திரிகைகள் உள்ளிட்டவை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மக்கள் வெளியே செல்வது என்பது குறைந்தபாடில்லை. காய்கறி வாங்க போகிறறோம், மளிகை பொருட்கள் வாங்க போகிறோம், வாகனத்திற்கு பெட்ரோல் போட போகிறோம் என்று வெளியே அதிகஅளவில் வரத் தொடங்கினர்.

இதன் காரணமாக, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல், நோய் மேலும் பரவும் சூழ்நிலை உருவானது. இதை தொடர்ந்து, மக்கள் வெளியே வருவதை தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்குகள், மளிகை, காய்கறி கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது, காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கிடையே, தமிழகத்தில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். அத்தியவாசிய பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்தல், ஊடரங்கு நீட்டிப்பு? மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சேவைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தயுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வருடன், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Palanisamy ,district administrators ,consultation , Coronation Precautions: Chief Minister Palanisamy's consultation with all district administrators today
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...