×

ஜோலார்பேட்டை டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை மாற்ற திறந்தபோது டாஸ்மாக் கடையை சூழ்ந்த குடிமகன்கள்: போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு திறந்த போது சூழ்ந்த குடிமகன்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் சுவரை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு நடைபெற்று வருவதால் துறை அதிகாரிகள் அங்குள்ள மதுபாட்டில்களை பத்திரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.  அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் மது பாட்டில்களையும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரிமுத்தூர், புள்ளானேரி, பார்சம்பேட்டை போன்ற பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை லாரி மூலம் எடுத்துச்சென்று ஓர் இடத்தில் வைக்க புள்ளானேரி பகுதியில் உள்ள கடைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சென்றனர்.  அந்த கடையை திறக்கும்போது சுற்றுப்பகுதியில் உள்ள குடிமகன்கள் மதுபாட்டில் வாங்க கடைைய சூழ்ந்து கொண்டனர். ஊழியர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்வதில்லை என கூறினர். இதனால் அத்துமீறி குடிமகன்கள் கடைக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களை கலைக்க முயன்றனர். ஆனால் கடைக்குள் நுழைந்து சிலர் மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அவர்கள் கலைந்து ஓடினர். இதையடுத்து ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் போலீசார் பாதுகாப்புடன் மதுபாட்டில்களை லாரி மூலம் ஊழியர்கள் எடுத்து சென்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் சில டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டில்களை லாரியில் ஏற்றி தனியாக ஒரு இடத்திற்கு கொண்டுவந்து குடிமகன்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தனர். மீதம் உள்ள மதுபாட்டில்களையே பாதுகாக்கப்பட்ட குடோனில் வைத்தனர். அங்கும் குடிமகன்கள் குவிந்ததால் அவர்களுக்கு 110 மதிப்புள்ள குவாட்டர் 400க்கு விற்பனை செய்தனர். கூட்டம் கூட்டமாக குடிமகன்களுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சரக்குகளை விற்பனை செய்தது ெபரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் கடையை உடைத்து 3,908 பாட்டில்கள் கொள்ளை
திண்டுக்கல், சத்திரம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக கடை ஊழியர்களுக்கு நேற்று அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். புகாரின்படி திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே 3,908 மதுபாட்டில்களை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Citizens ,Task Shop ,Jollaparte Task Shop , Jolarpettai, Task Shop, Liquor Store, Task Shop, Citizens, Police
× RELATED பாணாவரம் அடுத்த மகேந்திரவாடியில்...