×

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த கீழக்கரை முதியவருக்கு கொரோனா உறுதி: குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சோதனை

* இறுதிச்சடங்கில் 300 பேர் பங்கேற்றதால் அதிர்ச்சி

கீழக்கரை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த கீழக்கரை முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச்சடங்கில் 300 பேர் கலந்து கொண்டதாக வரும் தகவல்களால் கீழக்கரை பகுதியில் அதிர்ச்சி நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த 69 வயது முதியவர், கடந்த மார்ச் 15ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னையிலும் இவருக்கு ஒரு வீடு உள்ளதால், அங்கேயே தங்கினார். இவரது குடும்பத்தினர் அனைவரும் கீழக்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவரது மூத்த மகன் மட்டும், சென்னை சென்று தனது தந்தையுடன் தங்கியிருந்தார்.

துபாயில் இருந்து திரும்பிய 3 நாட்களில் முதியவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லாமல், அருகில் உள்ள மருந்துக் கடையில் அவர் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் 4 நாட்களாகியும் காய்ச்சல் குறையாததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர், இவர் துபாயில் இருந்து வந்ததை அறிந்து, உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதன் பின்னர் 3 நாட்கள் கழித்து, முதியவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பினர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி மாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதி கடிதத்துடன், அவரது மகன் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரைக்கு கொண்டு வந்தார். 3ம் தேதி காலை கீழக்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், முதியவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு நேற்று காலை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்களுக்கு கிடைத்தது. அதில் முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முதியவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களை உடனடியாக தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதியவர் சென்னையில் காய்ச்சலால் அவதிப்பட்டபோது, உடனிருந்து கவனித்த மகனின் ரத்த மாதிரியை எடுத்து, பரிசோதனைக்கு அனுப்ப சுகாதாரத் துறையினர் ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை விரைந்துள்ளனர். மேலும் மகனின் குடும்பத்தினர், அவருடன் நெருங்கிப் பழகியவர்களின் விபரங்களை கேட்டு, அவர்களையும் தனிமைப்படுத்தி, கண்காணிப்பில் வைக்க சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். 300 பேருக்கு பரிசோதனை: கீழக்கரையில் முதியவரின் இறுதி நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தற்போது அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளதால் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை பரிசோதனை செய்ய உள்ளனர்.

அலட்சியம்... விபரீதம்
சென்னை அரசு மருத்துவமனையில் முதியவர் உயிரிழந்தபோது, சரியாக ஆராயாமல் கொரோனா நோய்த்தொற்று இல்லை என மருத்துவமனை நிர்வாகம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாதாரண மரணம் என நம்பி இறுதிச்சடங்கை செய்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இறுதிச்சடங்கில் பங்கேற்ற மாஜி அமைச்சருக்கு சோதனை?
கீழக்கரை முதியவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கலந்துகொண்டதாக தெரிகிறது. தற்போது முதியவர் கொரோனாவால் தான் உயிரிழந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளதால், மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிகண்டனுடன் சென்ற அவரது ஆதரவாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.



Tags : Coroner ,death ,Stanley Hospital ,Chennai Coroner ,Chennai , Stanley Hospital, Chennai, kilakkarai old, Corona
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...