×

ஏர் இந்தியா விமானத்துக்கு பாகிஸ்தான் பாராட்டு

புதுடெல்லி: நண்பர்கள் பாராட்டுவது பெரிய விஷயம் இல்லை. பரம எதிரி ஒருவரே மனமுவந்து பாராட்டுவது என்றால், அது எப்பேர்ப்பட்ட காரியமாக இருக்க வேண்டும்? உலகம் முழுவதும் கொரோனா வைரசால் ஏராளமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மருந்துகள், உபகரணங்கள் இருக்கும் நாடுகள் ஓரளவுக்கு தப்பி உள்ளன. ஆனால், இவற்றை வெளிநாடுகளில் இருந்துதான் வாங்க வேண்டும் என்ற நிலையில் உள்ள நாடுகள், பாலைவனத்தில் தண்ணீருக்கு கெஞ்சும் பயணிகளை போன்ற நிலையில் உள்ளன. அமெரிக்காவே, இந்தியாவிடம் மலேரியாவுக்கான மருந்தை, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தன் நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சி வருகிறது.

இதுபோன்ற நிலையில், இந்தியா பரந்த மனப்பான்மையுடன் பல்வேறு நாடுகளுக்கு தன்னால் முடிந்த வரையில் உதவி வருகிறது. வெளிநாடுகள் கேட்டும் மருந்துகள், உபகரணங்கள் ஆகியவற்றை ஓரளவுக்கு அனுப்பி வருகிறது. இதுபோன்ற நிவாரணப் பொருட்கள் அனைத்தையும், ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் தான் பறந்து, பறந்து சென்று கொடுத்து வருகின்றன. கடந்த 2ம் தேதி, மும்பையில் இருந்து இதுபோன்ற நிவாரணப் பொருட்களுடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு சென்றன. முதல் விமானம் அன்று மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்தபோது, இந்திய விமானி அந்நாட்டு விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்புக் கொண்டு தங்கள் விமானம், பாகிஸ்தான் எல்லையில் நுழைந்துள்ளதாக தெரிவித்தார். வழக்கமாக இதுபோன்ற சமயங்களில், ‘தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை அடியில் பறக்க வேண்டும்’ என்பதுபோன்ற தொழில்நுட்ப தகவல்கள் மட்டுமே விமானிக்கு அளிக்கப்படும். ஆனால், முதல் முறையாக பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ‘‘ஏர் இந்தியா நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் உங்கள் விமானத்தை வரவேற்கிறோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் விமானத்தை இயக்குவது எங்களுக்கு பெருமையளிக்கிறது. எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறப்பட்டது. இது இந்திய விமானிக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக அவர், ‘‘தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி’’ என்று தெரிவித்தார்.

Tags : Air India ,Pakistan , Air India Flight, Pakistan
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...