×

கொரோனாவால் 21 முதல் 40 வயதுக்காரர்கள் 42% பேர் பாதிப்பு: சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தகவல்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் 21 முதல் 40 வயதுடையோர் 42 சதவீதம் பேர் என்று, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் சோதனை உறுதிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா சோதனை உறுதிசெய்யப்பட்ட 17 சதவீதம் பேர் மட்டுமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்டவர்களில் 29 சதவீதம் பேர் 20 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களாகவும், 32 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். மேலும், 9 சதவீதம் பேர் 20 வயதுக்கு குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், ‘நாட்டில் பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த விவரங்களில் வயது குறித்த எந்தவொரு பகுப்பாய்வையும் மேற்கொள்ளவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள் அல்லது நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்றார். கடந்த 2 நாட்களில் நாடு தழுவிய அளவில் புதிதாக 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, மத்தியபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 58 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களின் வரிசையில் மகாராஷ்டிராவில் 551 ஆகவும், தமிழகத்தில் 476 ஆகவும், டெல்லியில் 431 ஆகவும் உள்ளன.

மொத்தமாக 3,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விரைவான ‘ஆன்டிபாடி’ அடிப்படையிலான ரத்த பரிசோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.  இத்தகைய சோதனைகளின் முடிவுகள் 15-30 நிமிடங்களில்  கிடைக்கும். முகக் கவசங்களை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் சுகாதார அமைச்சகம் திருத்தி வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் பாதிக்காதவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லாதவர்கள் அல்லது நோயாளிகளை கவனிப்பவர்கள் முகக் கவசங்களை அணிய தேவையில்லை என்று கூறப்பட்டது.
 
ஆனால், தற்போது மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் மற்றும் சுவாச முகக் கவசங்கள் போன்றில்லாமல் வீட்டிலேயே பருத்தி நூலால் தயாரிக்கப்பட்ட ‘பேஸ் கவர்’களை பயன்படுத்தலாம். அவற்றை முறையாகக் கழுவி உலர்த்தி மீண்டும் பயன்படுத்தலாம். நோய் தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் அல்லது சுவாச பாதிப்பு இல்லாதவர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசத்தை வீட்டை விட்டு வெளியேறும்போது பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags : Ministry of Health , Corona, Federal Ministry of Health
× RELATED பாலஸ்தீனியர்கள் பலி 30 ஆயிரத்தை கடந்தது