×

கொரோனா துளிகள்

இங்கி. மக்களுக்காக 7 சிறப்பு விமானம்:
உலகின் பெரும்பான்மை நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால், சர்வதேச விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டு இருக்கிறது. இதனால், முடக்கத்துக்கு முன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 35 ஆயிரம் இங்கிலாந்து மக்கள், இங்கேயே சிக்கி தவிக்கின்றனர். தங்கள் நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டஅவர்களை அழைத்து செல்வதற்காக இங்கிலாந்து அரசு 7 சிறப்பு விமானங்கள் இயக்க உள்ளது. இதன்படி புதன், வெள்ளி, ஞாயிறு கோவாவில் இருந்தும், வியாழன், சனிக்கிழமை மும்பை மற்றும் டெல்லியில் இருந்தும் இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

விரைவு பரிசோதனையை தீவிரப்படுத்துங்கள்:
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பரிசோதனை செய்வதுதான், கொரோனாவை தடுப்பதில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவுக்கு காரணம் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை பரிசோதனை மூலம் கண்டறிந்து, தனிமைப்படுத்தி பின்னர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

இதுதான் ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நமக்கு கற்றுத் தந்த பாடம். அனைவருக்கும் விரைவாக பரிசோதனை செய்ய வேண்டும் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அரசுக்கு வலியுறுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது,’ என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு உபகரணங்கள் இல்ைல பிரான்சில் நர்சுகள் போராட்டம்:
பிரான்சில் கொரோனாவால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு 82,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,500 பேர் வரை இறந்துள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் நர்ஸ்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் தரப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கவச உடைபோன்ற உடல் முழுவதையும் மறைக்கு ஆடை, உயர்தர முகக்கவசம், கையுறை போன்றவற்றை தராமலேயே வெறுமனே சாதாரண முகக்கவசம் அணிந்து பணியாற்ற தாங்கள் பணிக்கப்படுவதாக நர்ஸ்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதனால் தங்களுக்கு மட்டுமின்றி, தாங்கள் வீடுகளுக்கு செல்லும்போது தங்கள் குடும்பத்தினருக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால் பிரான்ஸ் நர்ஸ்கள், ‘நிர்வாண போராட்டம்’ என்ற பெயரில், தங்களது நிர்வாண புகைப்படங்களை சமூக இணையதளத்தில் வெளியிட்டு, ‘எங்களை நிர்வாண சிகிச்சை அளிக்க அரசு வலியுறுத்துகிறது’ என்று குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த போராட்டம் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

அனைவரும் இணைந்து சுகாதார பணியாளர்களுக்கு  உதவ வேண்டும்:
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது நேற்றைய டிவிட்டரில், `கொரோனாவுக்கு எதிரான போரில், தங்களின் உயிரை பற்றிய கவலை இல்லாமல், நமது மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பிரிவினர், சுகாதாரப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்த நேரத்தில் அனைவரும் இணைந்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு, ஆதரவு அளிக்க வேண்டும். இது நம் அனைவரின் கடமையாகும். அவர்களுக்கான உங்களின் செய்திகளை அனுப்புங்கள்’ என்று கூறி, ‘உங்களால் பெருமிதம் அடைகிறோம்’ (WeAreProud Of You) என்ற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளார்.



Tags : Corona ,UK , UK, people, 7 special aircraft
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...