×

அத்தியாவசிய பொருட்களை சந்தைப்படுத்த நடவடிக்கை: தட்சணாமூர்த்தி, வேளாண்மை துறை இயக்குனர்

* அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் எங்கேயாவது சிக்கல் இருந்தால் வேளாண்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கூறினால் அவர்கள் கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள்.

விவசாயிகள் தங்களது காய்கறி பொருட்களை உழவர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்யலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடமும் உழவர் சந்தைகளை பெரிய இடங்களிலோ அல்லது மைதானத்தில் இருக்குமாறு அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அதன்பேரில் பெரிய மைதானங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உழவர் சந்தைகள் அமைக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேளாண்துறை, வேளாண் விற்பனைத்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகளை விவசாயிகள் தொடர்பு கொண்டு பொருட்களை விற்று தருமாறு கேட்டாலோ அல்லது பொருட்களை கொண்டு செல்லுமாறு கேட்டாலோ, அவர்கள் ஏற்பாடு செய்து தருவார்கள்.

தற்போது அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல பாஸ் தேவையில்லை. மேலும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் எங்கேயாவது சிக்கல் இருந்தால் வேளாண்துறை அல்லது தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கூறினால் அவர்கள் கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள். விவசாயிகளிடம் இருந்து காய்கறி, பழங்கள் பொருட்களை உழவர் குழுக்கள் மூலமாக கொண்டு செல்லபட்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறுவட்டத்திலும் (பிளாக்) உழவர் உற்பத்தியாளர்கள் குழு, உழவர் ஆர்வலர்கள் குழுக்கள் இருக்கிறது. அந்த குழுக்கள் மூலம் விவசாயிகளிடம் பொருட்களை சேகரித்து அதை கொண்டு செல்ல வேளாண்துறை சார்பில் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 அவர்கள் தெரு, தெருவாக கொண்டு சென்று ஒவ்வொருவரின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் வகையில் வேளாண்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மக்களின் வசதிக்கேற்ப 100, 50, 30 பேக் என்று காய்கறிகள் தொகுப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதில் 18 வகை காய்கறிகள் இருந்தால் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் நலன் கருதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சென்று சேரும் வகையில் உழவர் குழுக்கள் மூலம் வேளாண்துறை இப்பணிகளை செய்து வருகிறது.  இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று விநியோகம் செய்யும் குழுக்களிடம் வேளாண்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அவர்களிடம் அத்தியாவசிய பொருட்களை ெகாண்டு செல்வதில் சிக்கல் இருந்தால் அது குறித்து தெரிவிக்குமாறும் அவர்களிடம் கூறினார். இந்த கூட்டத்தில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.   அப்போது, வியாபாரிகள் சார்பில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையேற்று அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை செயலாளர் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார். எந்த காரணத்தை கொண்டும் அத்தியாவசிய பொருட்களை தடுக்க கூடாது  என்று சொல்லப்பட்டுள்ளது. தடுத்ததாக புகார் கூறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்பிறகும், விவசாயிகள் தங்களது பொருட்களை கொண்டு ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டாலோ, வியாபாரிகள் சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ வேளாண் இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்களிடம் கூறினால், அவர்கள் அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், வேளாண்துறை செயலாளர் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Dakshinamoorthy ,Agriculture Department , Director of Essential Commodities, Markets, Dakshinamoorthy, Agriculture Department
× RELATED மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்: வேளாண்துறை ஆலோசனை