பங்குச்சந்தையில் இருந்து 1.1 லட்சம் கோடி முதலீடு வாபஸ்

புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த மாதம் 1.1 லட்சம் கோடிக்கு மேல் வாபஸ் பெற்றுள்ளனர்.  கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச பங்குச்சந்தைகள் தடுமாறி வருகின்றன. இந்தியாவிலும் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பங்குச்சந்தைகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டு வருகிறது.  இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், கடந்த மாதத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மொத்தம் 1,18,184 கோடியை வெளியேற்றியுள்ளனர். இதில் பங்குசந்தையில் இருந்து வெளியேற்றப்பட்ட 61,973 கோடி மற்றும் கடன் பத்திரங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 56,211 கோடி அடங்கும்.

Advertising
Advertising

 வெளிநாட்டவரின் பங்குச்சந்தை முதலீடுகள் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்துதான் முதலீடுகள் ஓரளவு அதிகரிக்க தொடங்கின. தொடர்ந்து 6 மாதமாக முதலீடுகள் கணிசமான அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கடந்த மாதத்தில் மிக அபரிமிதமான அளவுக்கு முதலீடு வெளியேற்றப்பட்டுள்ளது. இது பங்குச்சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக கருதப்படுகிறது. தவிர, இந்த மாதத்தில் 2 நாட்கள் நடந்த வர்த்தகத்தில் மட்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு 6,735 கோடி வெளியேற்றப்பட்டுள்ளது.

இதில் பங்குச்சந்தையில் இருந்து 3,802 கோடி மற்றும் கடன் பத்திரங்களில் இருந்து 2,933 கோடி அடங்கும்.  கடந்த 2008ல் பொருளாதார நெருக்கடி இருந்தபோது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 930 கோடி டாலர்கள்தான் வெளியேற்றியிருந்தனர். தற்போது கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 1,650 கோடி டாலர்கள் வெளியேற்றப்பட்டுள்ளது என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: