×

சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டத்தை கூட்டிய நூற்றுக்கணக்கான கடைகளுக்கு சீல்:3 மாதங்கள் திறக்க முடியாது,..தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

* 144 தடை உத்தரவு முடிய இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.
* இதுவரை தமிழகத்தில் 571பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளதால் கட்டுப்பாட்டை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூட்டத்தை கூட்டிய நூற்றுக்கணக்கான கடைகளுக்கு சீல் வைத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சீல் வைக்கப்பட்ட கடைகள் அடுத்த 3 மாதங்களுக்கு திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 14ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். தமிழகத்திலும் கொரோனா நோய் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. 144 தடை உத்தரவு காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்காக சிறிய மளிகை, காய்கறி, மருந்து கடைகள், பால் விற்பனை, பத்திரிகைகள் உள்ளிட்டவை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மக்கள் வெளியே செல்வது என்பது குறைந்தபாடில்லை. காய்கறி வாங்க போகிறறோம், மளிகை பொருட்கள் வாங்க போகிறோம், வாகனத்திற்கு பெட்ரோல் போட போகிறோம் என்று வெளியே அதிகஅளவில் வரத் தொடங்கினர்.

இதன் காரணமாக, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல், நோய் மேலும் பரவும் சூழ்நிலை உருவானது. இதை தொடர்ந்து, மக்கள் வெளியே வருவதை தடுக்கும் வகையில் பெட்ரோல் பங்குகள், மளிகை, காய்கறி கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது, காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம், கூட்டமாக மட்டன், சிக்கன், மீன் வாங்க படையெடுத்தனர். அவர்கள் சமூக இடைவெளி என்பதை துளி அளவுக்கு கூட கடைபிடிக்கப்படவில்லை. இதையடுத்து மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் மக்கள் நடமாட்டம் என்பது அதிகமாக இருந்தது.

இதையடுத்து 3வது முறையாக கடைகளுக்கு நேரம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதாவது, காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வாங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், என கடைக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமலான நேற்று தமிழகத்தில் பல இடங்களில் செயல்பட்ட கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், நேற்று ஞாயிற்றுக்கிழமை வேறு. இதனால், அனைவரும் சிக்கன், மட்டன், மளிகை, காய்கறி வாங்க படையெடுத்தனர்.

இந்நிலையில், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதா என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சென்னை முழுவதும் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது இறைச்சி கடைகள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 52  கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கிருந்து 425 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட கடைகள் அடுத்த 3 மாதங்களுக்கு திறக்க தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

144 தடை உத்தரவு முடிய இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதற்குள் தமிழகத்தில் 571 ேபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5  பேர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வரும் நாட்களில் கட்டுப்பாட்டை கடுமையாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. மீறி யாராவது வெளியே வந்தால் அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கவும் அரசு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.


Tags : Hundreds ,shops ,Tamil Nadu , Social Gap, Corona, Crowds, Seal, Government of Tamil Nadu
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...