தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் சீல்: சுமார் 2000 மதுபாட்டில்கள் பறிமுதல்...அரசு கடும் நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3374 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே,  பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார். அதற்கு 2 நாட்கள் கழித்து 24ம் தேதி 2வது முறை உரையாற்றும் போது, 21 நாட்கள்  ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார். இதனால், நாட்டு மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியவாசிய பொருட்கள் விற்பனையாகும் பால், காய்கறி, இறைச்சி, மீன், மருத்தகம் உள்ளிட்ட கடைகளுகள் மற்றும் கட்டுப்பாடுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், சமூக இடைவெளி முறையை பின்பற்றி இறைச்சி விற்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 100 இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மாநகரம் முழுவதும் 10 இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னை, சேலம், உளுந்தூர்பேட்டையில் தலா 10 கடைகளிலும், தாராபுரத்தில் 8 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட இறைச்சி கடைகளை அடுத்த 3 மாதங்களுக்கு திறக்க முடியாது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதனைபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 84 டாஸ்மாக் மதுக்கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரம் ஆகிய வட்டாரங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல்லில் ஸ்ரீதர் என்பவரிடம் இருந்து 864 மதுபாட்டிகள் பறிமுதல் செய்த போலீசார் தடையை மீறி விற்றதாக கைது செய்துள்ளனர். மது பாட்டில்களை விற்பனைக்காக எடுத்துக் கொடுத்த டாஸ்மாக் விற்பனையாளர் முருகேசன் என்பவர் தலைமறைவாகியுள்ளார்.

இதனைபோல், தூத்துக்குடியில் மதுபானம் விற்ற ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 744 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் சமூகவிலக்கலை கடைப்பிடிக்காத 3 இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரங்களில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்பட மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

Related Stories: