மது குடிக்க பணம் கேட்டு தகராறு தந்தை சரமாரியாக வெட்டி கொலை: மகன் போலீசில் சரண்

திருவொற்றியூர்: மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற மகன் போலீசில் சரணடைந்தார். சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (45), லாரி டிரைவர். இவரது மனைவி தையல்நாயகி (42). இவர்களது மகன்கள் சேதுபதி (23), தமிழ்செல்வன் (20). இவர்களில் தமிழ்செல்வன் சென்னை சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு சொத்தில் பங்கு கேட்டு தனது தாத்தாவை அரிவாளால் வெட்டிக் கொன்ற வழக்கில் நாகராஜை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த நாகராஜ், வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்தார். மேலும், மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி மனைவி தையல் நாயகியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நாகராஜ், மது அருந்த பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த மகன் தமிழ்செல்வன் நாகராஜை தட்டிக்கேட்டுள்ளார்.

Advertising
Advertising

இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகன் தமிழ்செல்வனை சரமாரி வெட்டியுள்ளார். அவரது 2 கைகளிலும் பலத்த வெட்டு விழுந்து ரத்தவெள்ளத்தில் துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு மகன் சேதுபதி, நாகராஜின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் பரிதாபமாக பலியானார். பிறகு எண்ணூர் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சேதுபதி சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, படுகாயமடைந்த தமிழ்செல்வனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நாகராஜின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேதுபதியை கைது செய்தனர்.

Related Stories: