கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை வரை மாநிலம் முழுவதும் 411 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவை மதித்து, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இதுதொடர்பாக வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பி, தன்னார்வர்களாக வர அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி சேலம் மாவட்டம் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, சிஇஓ கணேஷ்மூர்த்தி அறிவுறுத்தலின்படி, சேலம், சேலம் ஊரகம், ஆத்தூர், இடைப்பாடி, சங்ககிரி ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும், சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு சென்று, நோட்டீஸ் விநியோகிக்கின்றனர். அத்துடன், கொரோனா நிவாரண உதவித்தொகைக்கான டோக்கன் வழங்க உதவிபுரிவது,  தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்றனர். 

Related Stories: