வடுவூர் அருகே நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பம்: பாஸ்போர்ட் காணாமல் போனதால் சோகம்

மன்னார்குடி: பாஸ்போர்ட் காணாமல் போனதால் நாடு திரும்ப முடியாமல் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பம் தவித்து வருகிறது. இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் ஜெனிஸ்டன்(32). இவர் தனது மனைவி டெனிசியா (26). குழந்தைகள் ஜெனிபர் (7), கசோலிசனா(2) மற்றும் மனைவி டெனிசியாவின் தங்கை கனிஷ்டனா (13), தம்பி கனிஷ்டன் (12) ஆகியோரு டன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூன்று மாத டூரிஸ்ட் விசாவில் சென்னை வந்துள்ளார். பின்னர் சென்னையில் இருந்து டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டு இவர்கள் தமிழகத்திற்கு வந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு வேளாங்கண்ணி சென்றனர்.

அங்கு இவர்களின் பாஸ்போர்ட் காணாமல் போய் விட்டதாக கூறப் படுகிறது. இதுகுறித்து ஜெனிஸ்டன் காவல் துறைக்கு தகவல் கொடுக்காமல் பிரான்ஸ் நாட்டில் உள்ள தனது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் விசாவும் காலாவதியாகி விட்டது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஜெனிஸ்டனின் உறவினர் நடத்தி வரும் வணிக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த திருவாரூர் மாவட் டம் வடுவூர் காவல் சரகத்திற்குட்பட்ட 29 மேல நெம்மேலி கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (28) என்பவர், ஜெனிஷ்டனை செல்போனில் தொடர்பு கொண்டு தனது வீட்டின் முகவரியை கொடுத்து அங்கு சென்று தங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அதன் பேரில் மேலநெம்மேலி கிராமத்திற்கு சென்ற ஜெனிஸ்டன் தனது குடும்பத்தினரோடு 3 மாதம் அங்கு தங்கியபடி வேறு வழியில் பாஸ்போர்ட் பெறுவதற்கு முயற்சித்து வந்துள்ளார். இந்நிலையில், அறிவழகனின் தாயார் ஆரவள்ளி என்பவருக்கும், ஜெனிஸ்டன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் ஆரவள்ளி வீட்டில் இருந்து அவர் தனது குடும்பத்தினரோடு வெளியேறிய அவர் வடுவூர் காவல் நிலையத்திற்கு சென்ற போது அவ்வழியே வந்த மேல நெம்மேலி விஏஓ சுரேஷ் குமார் என்பவர் இவர்களை மறித்து விசாரணை செய்ததில் மேற்கண்ட விபரங்களை ஜெனிஸ்டன் கூறியுள்ளார்.

இதுகுறித்து விஏஓ, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி, தாசில்தார் கார்த்திக் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஊர் பொதுமக்கள் ஜெனிஸ்டன் குடும்பத்தை சேர்ந்த 6 பேரையும் தங்கள் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு கிராம மக்கள் சிலர் தங்களால் ஆன உணவு உள்ளிட்ட சில அத்தியாவசிய உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மன்னை தொகுதி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜாவும் தன்னால் ஆன உதவிகளை அவசியம் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

ஒருபுறம் கொரோணா வைரஸ் அச்சம், மறுபுறம் பாஸ்போர்ட் காணமல் போய், விசாவும் காலாவதியான நிலையில் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் ஜெனிஸ்டன் உள்ளிட்ட 6 நபர்களும் சமுதாய கூடத்தில் பரிதாபமான நிலையில் உள்ளனர். இவர்கள் சொந்த நாடு திரும்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: