தகவல் கேட்டு 10 நாளுக்கு மேல் ஆகிவிட்டது; 12 வகையான தளவாட பொருட்கள் எங்கே?.. இஎஸ்ஐ மருந்தக ஊழியர்கள் ஆதங்கம்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் இதுவரை 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 4 ஆயிரம் பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கின்றனர். இப்படி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே சில குறைகள் இருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள இஎஸ்ஐ மருந்தக ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மருந்தகங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள், பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

இதனால் தினசரி உயிரை பணயம் வைத்து காலை, மாலை பணிக்கு சென்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆகவே ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனே நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

குமரியை பொறுத்தவரை நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தக்கலை, மணவாளக்குறிச்சி, நித்திரவிளை, குழித்துறை, இடைக் கோடு, கருங்கல் ஆகிய 8 இடங்களில் இஎஸ்ஐ மருந்தகங்கள் உள்ளன. இங்கு சுமார் 100 பேர் பணியாற்றி வருகின்றனர். தினசரி காலை 7 மணிமுதல் 10.30 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து 6.30 மணி வரையிலும் இந்த மருந்தகங்கள் செயல்படுகின்றன.

தற்போது கொரோனா பீதியை கிளப்பி உள்ள நிலையில், இஎஸ்ஐ மருந்தகங்களுக்கு தினசரி வந்து செல்கின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மாஸ் அணிவது முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் மருந்தகங்களுக்கு வருகின்றவர்கள் மாஸ்க் அணியாமலும், ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றாமலும் இருக்கின்றனர். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு மதுரை மண்டல இஎஸ்ஐ மருந்தகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும்,

தேவையான தளவாடங்கள் குறித்து விவரம் தெரிவிக்குமாறு தகவல் கேட்டு இருந்தனர். இதையடுத்து தெர்மல் ஸ்கேனர், என்95 மாஸ்க், லைசோல், கிளவுஸ், லிக்கியூடு சோப், பிபிஇ கிட்ஸ் என்று மொத்தம் 12 வகையான பொருட்கள் கேட்க்கப்பட்டு இருந்தன. ஆனால் இன்று வரை தளவாட பொருட்கள் எதுவும் வந்து சேரவில்லை. இது குறித்து குமரி மாவட்டத்தை சேர்ந்த மருந்தக ஊழியர்கள் கூறியது: இஎஸ்ஐ மருந்தகங்களுக்கு தற்போது அதிக எண்ணிக்கையில் மக்கள் வரத் தொடங்கி உள்ளனர். ஆனால் மருந்தகத்தில் போதிய உபகரணங்கள் இல்லாததால் பாதுகாப்பு வசதி குறைபாடு ஏற்பட்டு உள்ளது.

வேறு வழியில்லாமல் தினசரி பணிக்கு வந்து செல்கிறோம்.  மதுரை மண்டல அலுவலகத்துக்கு 12 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் கேட்டு 10 நாளுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்று வரை எந்தவிதமான பதிலும் இல்லை. பொருட்களும் வந்தபாடு இல்லை. அதிகாரிகள் பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்லிவிட்டு இருந்து விடுகின்றனர். பணியில் இருக்கின்ற ஊழியர்களை பற்றி அவர்கள் கண்டு கொள்வது இல்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றனர்.

2 நாளில் அனுப்பபடும்

இது குறித்து மதுரை மண்டல நிர்வாக மருத்து அலுவலர் தர்மராஜனிடம் கேட்டபோது அவர் கூறியது: ஒவ்வொரு மாவட்டம் வாரியாக 12 வகையான தளவாட பொருட்கள் அனுப்பபட்டு வருகிறது. இன்னும் 2 நாளில் அனைத்து மாவட்டங்களுக்கும் சோப்பு, மாஸ்க், கிளவுஸ் உள்பட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன என்றார்.

Related Stories: