ஊரடங்கு, சமூக இடைவெளி உத்தரவை தொடர்ந்து உலக நாடுகளின் ‘கொரோனா’ தண்டனை தெரியுமா?.. வைரசை மறைத்தால் சவுதியில் ரூ1 கோடி அபராதம்

புதுடெல்லி: கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு, சமூக இடைவெளி உத்தரவை தொடர்ந்து சில நாடுகள் கடுமையான தண்டனைகளை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கொரோனா வைரசை மறைத்தால் சவுதியில் ரூ1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், 90 நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. கிட்டதட்ட உலக மக்கள் தொகையில் பாதி பேர் (450 மில்லியன் மக்கள்) வீடுகளில் உள்ளனர். ஐக்கிய நாடு சபையை பொறுத்தவரை, உலகம் முழுவதும் 180 நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

உலக மக்கள் தொகையில் 87 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை வீட்டில் வைத்திருக்க, உலக நாடுகள் கடுமையான விதிகளை விதித்து வருகின்றன. ஆனால், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், வளர்ந்த நாடுகள் முதல் ஏழை நாடுகளின் மக்கள் வரை, சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. அதனால், அந்தந்த நாடுகள் கடுமையான சட்டங்களையும், தண்டனைகளையும் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சில நாடுகளில் அறிவிக்கப்பட்ட தண்டனை விபரங்கள் வருமாறு:

இத்தாலி: விதிமுறைகளை மீறி பயணம் மேற்கொண்டால் 4 மில்லியன் அபராதம் விதிக்கப்படும். காரணமின்றி வெளியே சுற்றியதற்காக லோம்பார்டியில் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கு 40,000 பேருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா: சுற்றித்திரிந்தால் ரூ.40 ஆயிரம் அபராதம். மேலும், கொரோனா நோய் அல்லது பயணம் குறித்த விபரங்களை மறைத்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். உலகிலேயே மிக அதிகபட்ச தண்டனை மற்றும் அபராதம் ஆகும்.

ஆஸ்திரேலியா: சில இடங்களில் சுமார் 23 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்: தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக இரண்டரை மில்லியன் அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா: வைரஸ் தடுப்புச் சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல்  அளித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக 7 ஆண்டுகள்  சிறைத்தண்டனை வழங்குதல்.

மெக்சிகோ: 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

பனாமா: ஆண்களும் பெண்களும் ஒருநாள் விட்டு ஒரு நாளுக்கு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு பெண்கள் மற்றும் ஆண்கள் வெவ்வேறு நாட்களில் வீட்டை விட்டு வெளியேறலாம். பெண்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும்.

கொலம்பியா: எப்போது புறப்பட வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது என்றால் அடையாள எண்ணால் மட்டுமே தீர்மானிக்கப்படும். உதாரணத்திற்கு அடையாள எண் 0, 4 அல்லது 7 இன் கடைசி இலக்கத்தைக் கொண்டவர்கள் திங்களன்று வெளியே செல்லலாம்.

ஆஸ்திரியா: செக் குடியரசு, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.

பிலிப்பைன்ஸ்: விதிமுறை மீறுபவர்களை சுட்டுக் கொல்ல பிலிப்பைன்ஸ் அதிபர் டூர்ட்டே உத்தரவிட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறினால் உடனே சுட போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா: விதிமுறை மீறி வெளியே சுற்றினால், போலீசார் ரப்பர் தோட்டாக்கள் மூலம் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பெரு: கால் சென்டரில் வதந்திகளை பரப்பியதற்காக ரூ.45,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீனா: பயண விபரத்தை மறைத்தால் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சுற்றித்திரிந்தால் விநோத தண்டனைகள் வழங்கப்படும்.

இந்தியா: பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் மீது, ஐ.பி.சி. மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் 2  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Related Stories: