யாரும் அச்சப்பட தேவையில்லை.. மின் விளக்குகளை தவிர மற்ற மின் உபகரணங்களை இயக்கத்தில் வைத்து கொள்ளுங்கள் : மின்சார வாரியம் அறிவுறுத்தல்

சென்னை : நாளை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைப்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்விளக்குகளை அணைக்கும் போது மின்கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் மின்விளக்குகளை அணைக்கும் போது,மற்ற மின் உபகரணங்களை வழக்கம் போல் இயக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது. பிரதமர் அறிவித்தபடி நாளை இரவு 9 மணிக்கு ஒட்டுமொத்தமாக மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, மீண்டும் ஒளிர செய்யும் போது பல இடங்களில் மின் தடை ஏற்படலாம் என்பதால் பாதிப்பை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராகி வருகிறது.

கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கின் ஒரு அம்சமாக நாளை  நாடு முழுவதும் இரவு 9 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்படும் போது, மின்சாரத்தின் பயன்பாடு பெருமளவு குறையும்.மேலும் 9 நிமிடங்களுக்குப் பிறகு ஒரே நேரத்தில் அனைவரும் மின் விளக்குகளை ஒளிரச் செய்தால் மின்தேவை திடீரென அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கான மின் விநியோகம் குறைந்துள்ள நிலையில், வீடுகளுக்கான மின்விநியோகமும் திடீரென குறைந்து சிறிய இடைவேளியில் அதிகரிப்பதால் மின் மாற்றி மற்றும் மின்பாதைகளில் பழுது ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் மின் கட்டமைப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.மின் விளக்குகளை தவிர மற்ற மின் உபகரணங்களை வழக்கம் போல் இயக்கத்தில் வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் பாதை பழுதாகி மின் தடை ஏற்பட்டால் அதனை சரி செய்ய 12 மணி நேரம் வரை ஆகும் என்பதால் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக மின்சார வாரியம் தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் மின்வாரிய செயற்பொறியாளர்கள், பணியாளர்கள் மின்வாரிய அலுவலகங்களில் நாளை இரவு 8 மணி முதல் 10.30 மணி வரை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: