கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அமைச்சர்களுடன் ஏப்ரல் 6-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: மத்திய அமைச்சர்களுடன் ஏப்ரல் 6-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில பலி எண்ணிக்கை 59,000ஐ தாண்டிய நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்களுக்கு ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலானதால் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரமால் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வீடியோ காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீட்டின் அனைத்து மின்சார விளக்குகளையும் 9 நிமிடங்கள் அணைத்து விட்டு, வீட்டின் வாசல் அல்லது பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி அல்லது விளக்கு அல்லது செல்போன் டார்ச் ஆகியவற்றை ஒளிரச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று கொரோனா தடுப்புப்பணியில் உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட 11 குழுக்களுடன் நாடு முழுவதும் மருத்துவமனைகளின் தயார் நிலை குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை தேவையான அளவில் உற்பத்தி செய்ய பிரதமர் உத்தரவிட்டார். இதனையடுத்து வந்த தகவலின் அடிப்படையில் மத்திய அமைச்சர்களுடன் ஏப்ரல் 6-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: