அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும்: முதல்வர் பழனிசாமி நெகிழ்ச்சி

சென்னை: தமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக கேரள மாநிலம் அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நட்புறவும், சகோதரத்துவமும் என்றென்றும்  வளரட்டும் என்று  கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரள அரசு மூடப்போவதாக செய்தி வெளியானது. ஆனால் இது போலியான செய்தி என விளக்கம் அளித்தார்.

இதுபோன்ற ஒரு விஷயத்தை நாங்கள் நினைத்ததில்லை. அவர்கள் நம் அண்டை மாநிலத்தவர்கள் மட்டுமல்ல, அவர்களை நம் சகோதரர்களாகவே பார்க்கிறோம்’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.

இதையடுத்து, கேரள முதல்வரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோவை, தமிழக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: