ஒன்றாக கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம்; கைகளை சோப்பு போட்டு கழுவி விட்டு நாளை அகல் விளக்கு ஏற்றுங்கள்...இந்திய ராணுவம் அறிவுரை

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஏற்கனவே 2 முறை டிவி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கடந்த மாதம் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற வலியுறுத்தினார். அதற்கு  2 நாட்கள் கழித்து 24ம் தேதி 2வது முறை உரையாற்றும் போது, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு வீடியோ ஒன்றை சமூக இணையதளத்தில் அவர் வெளியிட்டார்.

அதில் அவர் 11 நிமிடங்கள் உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது: முடக்க காலத்தில் மக்கள் வீட்டுக்குள் இருந்து சமூக விலகல் என்ற லட்சுமண் ரேகையை தாண்டக் கூடாது. வீட்டில் மக்கள் தனிமையாக உணரலாம். ஆனால்,  நாட்டு மக்கள் 130 கோடி பேரின் ஒட்டு மொத்த பலமும், நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை ( நாளை) இரவு 9 மணிக்கு  வீட்டின் அனைத்து மின்சார விளக்குகளையும் 9  நிமிடங்கள் அணைத்து விட்டு, வீட்டின் வாசல் அல்லது பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி அல்லது விளக்கு அல்லது செல்போன் டார்ச் ஆகியவற்றை ஒளிரச் செய்ய வேண்டும். அவ்வாறு ஒளிரச் செய்யும்போது, ‘சூப்பர் பவர்’ பிரகாசம்  ஏற்படும். அது, நாம் தனியாக இல்லை, அனைவரும் கொரானாவுக்கு எதிராக ஒட்டு மொத்த தீர்மானத்துடன் போராடுகிறோம் என்பதை உணர்த்தும் என்றார்.

நாளை அகல்விளக்கு அல்லது மெழுவர்த்தியை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. கைகளை சோப்பு போட்டு கழுவி விட்டு விளக்கேற்றும்படி  அறிவுறுத்தியுள்ளது. ஒன்றாக நாம் கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருவதை தடுக்கும் வகையில், அடிக்கடி ஹாண்ட் சானிடைசர் கொண்டு கைகளை நன்கு கழுவ  வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதில், ஆல்கஹாலிக் அடங்கிய சானிடைசர்களை பயன்படுத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

62% உயர் எத்தில் ஆல்கஹாலை உள்ளடக்கிய சானிடைசர்கள் எளிதில் தீ பற்ற கூடிய தன்மை கொண்டது. மேலும் இது போன்ற சானிடைசர்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கைகளில் பயன்படுத்தும் போது அதனை  நன்கு உலர வைக்க வேண்டும். அதேபோல, தீ அதிகம் பரவும் இடங்களில் நின்று சானிடைசர்களை பயன்படுத்தக்கூடாது.

தீ விபத்து:

இதற்கிடையே, கடந்த மார்ச் 29-ம் தேதி டெல்லியில் 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 35% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீ காயம் ஏற்பட்டது தொடர்பாக  மருத்துவர்கள் விசாரணை நடத்தியதில், அந்த நபர், சமையல் எரிவாயுவை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அதன் அருகாமையில் நின்றபடி தனது துணிகளில் ஹாண்ட் சானிடைசரை தெளித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது,  சானிடைசரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக அவரது துணியில் தீ பரவியுள்ளது. இதன் காரணமாக அவரது உடம்பில் 35 சதவிகித தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையில் இருப்பதாக தனியார்  மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் ஒப்பனை அறுவை சிகிச்சை துறை அறிவித்துள்ளது.

Related Stories: