×

கண்துடைப்புக்காக நடந்த ஆய்வு பென்னாகரத்தில் நாதியற்று தவிக்கும் மலைவாழ் மக்கள்: குடும்பத்திற்கு தலா 2 தக்காளி, 3 கிலோ அரிசி வழங்கினர்

பென்னாகரம்: பென்னாகரம் அருகே வனப்பகுதியில் அடிப்படை வசதிகளின்றி தவித்து வரும் மலைவாழ் மக்களுக்கு உதவுவதாக கூறி, கண் துடைப்புக்காக ஆய்வு நடத்திய அதிகாரிகள், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்காமல் சென்றதால், மலைவாழ் மக்கள் குழந்தைகளுடன் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகேயுள்ள பண்ணப்பட்டி, போடூர் அருகேயுள்ள முத்தூர்பட்டி, சருக்கல்பாறை உள்ளிட்ட வனப்பகுதியில் மலைவாழ் மக்களான இருளர் இன மக்கள் 200க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், இருளர் இன மக்கள் எந்தவித வருவாயும் இன்றி, சாப்பிட உணவு கூட கிடைக்காமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். இதனால், வேறு வழியின்றி தங்கள் பூர்வீக இடமான வனப்பகுதிக்கே மீண்டும் திரும்பியுள்ளனர். தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி நேற்று முன்தினம் தினகரனில் வெளியானது.

 இதையடுத்து, நேற்று திட்ட இயக்குனர் (பழங்குடியினர் நல வாரியம்) கீதா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மலைவாழ் மக்களை சந்திக்க சென்றனர். பென்னாகரம் ஊருக்குள் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என்பதால், அங்கு நடந்து செல்ல விரும்பாத அதிகாரிகள், மலைவாழ் மக்களை பண்ணப்பட்டியிலிருந்து சாலைக்கு வரும்படி கூறி வரவழைத்தனர். அதன்படி குடும்பத்தினருடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு, அரசின் சார்பில் தலா 10 கிலோ அரிசி, 3 லிட்டர் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்குவதாக தெரிவித்த அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர். மேலும், அவர்களுக்கு அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில் தங்கியிருக்கும்படி வாய் வார்த்தையாக கூறிவிட்டு, திட்ட இயக்குனர் கீதா அங்கிருந்து சென்று விட்டார்.

  இதனால், செய்வதறியாது திகைத்த மலைவாழ் மக்களுக்கு, ஆர்டிஓ தேன்மொழி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 2 வெங்காயம், 2 தக்காளி, 3 கிலோ அரிசி, பருப்பு வழங்கி அனுப்பி வைத்தார். தங்களுடைய வாழ்வாதாரத்தை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்கும் என நம்பிக்கையுடன் வந்த மலைவாழ் மக்கள், அதிகாரிகளின் நடவடிக்கையால் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.  இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘எங்களுடைய நிரந்தர வாழ்வாதாரத்திற்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கி ஆடு, மாடுகளை வழங்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் எங்களுடைய பசியை தீர்க்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 50 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்க மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும்,’ என்றனர்.Tags : Pennagaram ,hill country ,mountain people , cataract , Pennagaram ,tomatoes, family
× RELATED பார்த்துப்பார்த்து செலவு செய்ய...