கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் கோவில்வெண்ணியில் கிருமி நாசினி தெளிப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணி பள்ளிவாசலில் மியான்மரை சேர்ந்த மதபோதகர்கள் 13பேர் கடந்த மாதம் 23ம் தேதி வந்து தங்கினர். 24ம் தேதி முதல் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டதால் மியான்மருக்கு 13பேரும் செல்ல முடியவில்லை. அவர்களிடம் விசாரித்ததில், இவர்களுடன் கோவில் வெண்ணியை சேர்ந்த ஒருவர் என 14 பேரும் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என தெரியவந்தது. இவர்களை பார்க்க வந்த 4 பேர் உள்ளிட்ட 18 பேரையும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சேர்த்து ரத்த மாதிரி எடுத்ததில் கோவில்வெண்ணியை சேர்ந்த ஒருவருக்கும், மியான்மரை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. மற்றவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்.

கோவில்வெண்ணியில் உள்ள வீதிகளில் தீயணைப்புதுறை உதவியுடன் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.மேலும் கோவில்வெண்ணி சாலையில் பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டுள்ளது.நேற்று அப்பகுதியில் சளி, இருமல் இருந்த 21 பேரை பரிசோதனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவக்குழுவினர் அனுப்பி வைத்தனர். கோவில்வெண்ணியில் தங்கியிருந்த மியான்மர் நாட்டினரை பரிசோதனை செய்த 3 டாக்டர்களை மருத்துவதுறையினர், காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் அவரவர் வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: