பென்னாகரம் மலை கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் சென்ற நிவாரண பொருட்கள்: 200 குடும்பத்தினருக்கு வழங்கப்படுகிறது

தர்மபுரி: பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட வட்டுவனஅள்ளி ஊராட்சியில் உள்ள மலை கிராமங்களுக்கு, சிறப்பு நிவாரண பொருட்கள் கழுதைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா வட்டுவனஅள்ளி ஊராட்சியில் கோட்டூர் மலை, ஏரிமலை, அலகட்டு உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் தங்கள் விளை பொருட்களை கழுதைகள் மூலமாக மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில், கோட்டூர் மலை மற்றும் ஏரி மலையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு,  தமிழக அரசு அறிவித்துள்ள ஏப்ரல் மாதத்திற்கான நிவாரண பொருட்கள் கன்சால்பேளு என்ற மலையடிவார கிராமத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள கோட்டூர் மலைக்கு நேற்று கழுதைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இப்பொருட்கள் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், சீங்காடு என்ற மலையடிவார கிராமத்தில் இருந்து, ஏரிமலைக்கு 6 கி.மீ மலைப்பாதையில் நிவாரண பொருட்கள் கழுதைகள் மீது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சாலை வசதிகள் இல்லாத காரணத்தால், மாவட்ட நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

Related Stories: