கொரோனா ‘நுழைவதை’ தடுக்க செக்போஸ்ட் வெளியே போகக்கூடாது உள்ளே வரவும் முடியாது: ஆண்டிபட்டி அருகே கிராம மக்கள் ‘அலர்ட்’

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி கிராமத்தில் ஊர்மக்கள் வெளியில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்து கிராம எல்லையில் வேலியமைத்து இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் வெளியூர்காரர்களையும் ஊருக்குள் அனுமதிப்பதில்லை.டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஆண்டிபட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 5 எல்லைகளிலும், முட்செடிகள் மற்றும் கயிறுகளைக் கட்டி தடுப்புக்கட்டைகள் மூலம் வேலியமைத்து வெளியூர்காரர்கள் யாரும் நுழைய முடியாதவாறும், உள்ளூர் மக்கள் வெளியே செல்ல முடியாதவாறும் கிராமத்து இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குள் நுழையும் இடத்தில் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் சோதனைச்சாவடியை திறந்து கிருமிநாசினியால் கை மற்றும் கால்களை கழுவ வைத்து சம்பந்தப்பட்டவர்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர்.

மேலும் உணவு மற்றும் மளிகைப்பொருட்களும், இறைச்சியும் ஊராட்சிக்குள்ளேயே கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். ராஜகோபாலன்பட்டி ஊராட்சி மக்கள், தானாக முன்வந்து மேற்கொண்ட கொரோனா தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், அதற்கு ஒத்துழைத்து சுயகட்டுப்பாட்டுடனும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதும் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Related Stories: