×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் கடும் பாதிப்பு: பூக்களை பறிக்காமல் நிலத்தில் வீணாகும் அவலம்

திருவண்ணாமலை:  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் விவசாய பணிகளை மேற்கொள்ள தடையில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அறிவித்தது. ஆனாலும், அச்சத்தின் காரணமாக விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் வர தயங்குகின்றனர். அதனால், விவசாய பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், திருவண்ணாமலை பகுதியில் கொளக்குடி, வாளவெட்டி, வெறையூர், தண்டராம்பட்டு, கூடலூர், தச்சம்பட்டு, காஞ்சி, கடலாடி, பெரியகுளம், மஷார், படூர், கெங்கம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மலர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக, மல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை, கனகாம்பரம் போன்ற மலர்கள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு சாகுபடியாகும் மலர்கள் பெரும்பாலும், வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், தற்போது வாகன போக்குவரத்து இல்லை.

மேலும், பூக்களை வாங்குவற்கும் ஆட்கள் இல்லை. வீதிகளில் சென்று பூக்களை விற்பனை செய்தாலும், பொதுமக்கள் வாங்குவதற்கு அச்சப்படுகின்றனர். அதோடு, மல்லி, முல்லை, கனகாம்பரம் ஆகியவை ஒரு கிலோ 30க்கு விவசாயிகளிடம் விலை பேசுகின்றனர். ஆனால், பூக்களை பறிக்கவே ஒரு கிலோவுக்கு 30 கூலியாக தர வேண்டிய நிலை உள்ளது. கூலியாக கொடுக்கும் தொகைகூட விலையாக கிடைக்காததால், விளை நிலத்திலேயே பூக்களை பறிக்காமல் விவசாயிகள் விட்டுவிடுகின்றனர். குறிப்பாக, சாமந்தி பூக்களை ஒரு கிலோ 10க்கு வாங்கக்கூட யாரும் முன்வரவில்லை.வழக்கமாக, பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் பூக்கள் விலை உச்சத்தில் இருக்கும். அதனால், மலர் சாகுபடி செய்த விவசாயிகள் இந்த பருவத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக, கொரோனா நோய் பரவல் அச்சம், ஊரடங்கு உத்தரவு என்ற பேரிடி விவசாயிகள் மீது விழுந்திருக்கிறது. அதனால், மலர் சாகுபடி செய்த விவசாயிகள் நிலை வேதனைக்குரியதாக மாறியிருக்கிறது.

திருவண்ணாமலை பகுதியில் அதிக அளவில் மல்லிகை சாகுபடி செய்துள்ள ஒரு சில விவசாயிகள் மட்டும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதி பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலைக்கு பூக்களை வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனாலும், அவர்களுக்கும் போதுமான லாபம் இல்லை. ஆனால், குறைந்த பரப்பளவில் மலர் சாகுபடி செய்த சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலை பரிதாபமாக மாறியிருக்கிறது.பூக்களை பறித்துச்சென்று, தினசரி மார்க்கெட்டில் விற்று வாழ்வை நகர்த்தும் நூற்றுக்கணக்கான மலர் சாகுபடி விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் ஏதேனும் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Thiruvannamalai district , Cultivation, flower, Thiruvannamalai, district
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...