×

தேவாரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பற்றி எரிகிறது காட்டுத்தீ: நவீன உபகரணங்கள் இல்லாமல் தீயணைப்புத்துறை திண்டாட்டம்

தேவாரம்: தேவாரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் பற்றிய தீயை அணைக்க நவீன உபகரணங்கள் இல்லாமல், வனத்துறையினர் உயிரை பணயம் வைத்து அணைத்து வருகின்றனர். தேனி மாவட்டம், தேவாரம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி சாக்குலூத்து, அரிவாள்தீட்டிப்பாறை, பெரம்புவெட்டி உள்ளிட்ட அடர்ந்த காடுகளில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இதனை அடுத்து உத்தமபாளையம் வனத்துறையினர் தீப்பற்றி எரிந்த இடங்களுக்கு குழுவாக சென்று நேற்று முன்தினம் தீயை அணைத்தனர். மேலும் தீ எரியும் பகுதிகளில் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 நவீன உபகரணங்கள் இல்லாததால் பச்சை மரங்களின் கிளைகளை உடைத்து தீயை ஆபத்தான முறையில் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க 20 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாக்குலூத்து, சதுரங்கப்பாறை, ராசிங்காபுரம், கோம்பை பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், ``கோடை வெப்பத்தால் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதிகளில் சமூகவிரோதிகள் சிலர் தீ வைக்கின்றனர். இவர்கள் மீது வனத்துறை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : Western Ghats ,Devaram: Fire Department , Wildfire burns , Western Ghats, Devaram,Fire Department
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...