இந்திய அரசின் முடிவை விமர்சிப்பது வேதனை; பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவு தைரியமான முடிவு...WHO சிறப்பு தூதர் வரவேற்பு

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின் ஊரடங்கு உத்தரவிற்கு உலக சுகாதார அமைப்பிற்கான சிறப்பு தூதர் டேவிட் நபாரோ வரவேற்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உலகம்  முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,140 ஆக உயர்ந்துள்ளது. 1,097,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக அதிகரித்துள்ளது. இதுரை 68 பேர்  உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், கடந்த மாதம் 22-ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்ற பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

 அதற்கு 2 நாட்கள்  கழித்து 24ம் தேதி 2வது முறை உரையாற்றும் போது, இன்று (24-ம் தேதி) முதல் 21 நாட்கள் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவித்தார்.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் ஊரடங்கு உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பிற்கான சிறப்பு தூதர் டேவிட் நபாரோ, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு  உத்தரவை அமல்படுத்தவேண்டும். அதன்மூலம் தான், மக்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியும். இந்தியாவில், அந்த நடவடிக்கை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது.

வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, குறைந்த  எண்ணிக்கையில் இருந்தபோதே, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இது மிகச் சரியான முடிவு என்றார்.  எனினும், இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது வேதனை அளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதை அறிந்தும், மிக தைரியமாக, அரசு  எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு, நான் பாராட்டுகிறேன். இந்தியா, இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன், புதிய பாதிப்புகள் ஏற்படாது என நான் நம்புகிறேன். பிற நாடுகளுடன் ஒப்பிட்டு  பார்ப்பதால், எந்த பலனும் இல்லை. வெயில் காலத்தில்,கொரோனா தாக்கம் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது. இந்தியாவில் தற்போது வெயில் காலம் தொடங்கவுள்ளது. ஆகையால், அங்கு என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்ள  ஆவலாக காத்திருக்கிறேன். நிலைமை மோசமாக மாறாது என நான் முழுமையாக நம்புகிறேன். வரவிருக்கும் வெயில் காலம், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார்.

Related Stories: