தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு அனுப்பி வைத்ததில் மெகா மோசடி

* ஒவ்வொரு மூட்டையிலும் 4 கிலோ சுருட்டல்

* 75 % பேருக்கு விநியோகிப்பதில் சிக்கல்

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அனைத்து ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் அனுப்பியதில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், ஒவ்வொரு மூட்டைகளிலும் 4 கிலோ குறைவாக இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 14ம் தேதி தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தினக்கூலிகள், விவசாய கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதை சமாளிக்க ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் தலா ₹1000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி 1.94 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக ₹2014 கோடியே 80 லட்சத்து 68 ஆயிரமும், சர்க்கரை, பருப்பு, எண்ணெய் வழங்க ₹173 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரம் என மொத்தம் ₹2,188 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து ஏப்ரல் 2ம் தேதி முதல் ₹1000 மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் நேற்றுமுன்தினம் மாலை மற்றும் நேற்று காலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 34,840 ரேஷன் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு கொண்டு வரப்பட்டது. இவ்வாறு வாணிப கழகம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, பருப்பு பொருட்களில் ஒவ்வொரு மூட்டையிலும் 3 கிலோ முதல் 4 கிலோ வரை குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அனைவருக்கும் நிவாரண பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது எடை குறைவாக இறக்குமதி செய்யப்பட்ட நிவாரணபொருட்களில் ஒரு ரேஷன் கடைகளில் 1000 கார்டு இருந்தால் 600  கார்டுக்கு தான் தர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் தலா ஒருவருக்கு 20 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் பாமாயில் எண்ணெய் வழங்க வேண்டும். ஆனால், தற்போது எடை குறைவாக பொருட்கள் வந்துள்ளதால் ரேஷன் கடை ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும். அப்படி நிவாரண பொருட்கள் சிலருக்கு வழங்குவதை தவிர்த்தால் கூட பெரும் பிரச்சனை ஏற்படும். மேலும், அரசு அறிவித்த பொருட்களை எடை குறைவாக வழங்கினாலும் சிக்கல் ஏற்படும் என்பதால் ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரேஷன் பணியாளர்கள் சிலர் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்கள் மூலம் பொருட்களை எடை கூட போட்டு காட்டாமல் கூட்டுறவு பணியாளர்களிடம் கொடுத்து விடுகின்றனர். அவர்கள் இங்கு வந்து இறக்கி சோதனை செய்து பார்த்தால் மூட்டைக்கு 4 கிலோ வரை குறைவாக உள்ளது. இது குறித்து கேட்டால் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. உங்களது ஊழியர்கள் தான் பொருட்களை எடுத்து வருகின்றனர் என்று கூறி விடுகின்றனர். இதனால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாங்கள் புகார் அளித்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. இனி வருங்காலங்களில் ஒவ்வொரு ரேஷன் கடைகளில் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் மூலம் பொருட்களை இறக்கி எடை பார்த்து எங்களுக்கு தர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எடை குறைவை கண்டுபிடிக்க முடியும். சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றனர்.

சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு

சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில் பேசிய ரேஷன் கடை ஊழியர் ஒருவர், வந்தவாசி அருகே வழுவூர் என்ற பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வந்த பொருட்களில் 50 கிலோ ரேஷன் அரிசி மூட்டையில் 44 கிலோ தான் உள்ளது. அதே போன்று, 50 கிலோ சர்க்கரை மூட்டை 46 கிலோ தான் உள்ளது. இது தொடர்பாக பல முறை புகார் தெரிவிக்கிறோம். விற்பனையாளர் தான் பொருட்களை வாங்க சென்றார். 2 மூட்டை மட்டுமே எடை போட்டு காட்டுகின்றனர். எல்லா மூட்டையும் எடை போட்டு காட்ட முடியாது என்று வாணிப கழக ஊழியர்கள் கூறுகின்றனர். நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் தாருங்கள். நாங்கள் அப்படி தான் அனுப்புவோம் என்று கூறி வருகின்றனர் என்று பேசியதாக வெளியான வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: