தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு மீறல் ஒரேநாளில் 8,000 பேர் கைது: 5,697 வாகனம் பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரே நாளில் தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றியதாக 8 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5,697 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களை போலீசார் பிடித்து நூதன முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இருந்தாலும் மக்கள் வெளியில் சுற்றுகின்றனர்.அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றியதாக 7 ஆயிரத்து 268 வழக்குகள் பதிவு செய்து 7 ஆயிரத்து 847 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 697 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை மொத்தம் 49 ஆயிரத்து 303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 52 ஆயிரத்து 817 பேரை போலீசார் கைது  செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 ஆயிரத்து 903 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 17 லட்சத்து 2 ஆயிரத்து 444 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகரை பொறுத்தவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 399 வழக்குகளும், 118 ைபக்குகள் உட்பட மொத்தம் 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 91 வழக்குகளும், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 62 வழக்குகள் என மொத்தம் 153 வழக்குகள் போக்குவரத்து போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: