அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் ரோபோ சேவை

சென்னை: ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து வழங்க 3 ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் இதுவரை 60 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறப்பு வார்டில் ெகாரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து வழங்குவதற்கு ₹10 லட்சம் செலவில் 3 ரோபோக்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள் நோயாளிகளுக்கு தண்ணீர், பிரட் மற்றும் மருந்துகளை எடுத்தும் செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த ரோபோக்கள் மூலம் கொரோனா வார்டில் பணியாற்றும் ஊழியர்கள், நோயாளிகளுக்கு அருகில் செல்லாமல் தூரத்தில் இருந்து உணவு மற்றும் மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, 100 படுக்கைகள் வென்டிலேட்டர் வசதியுடன் தயார் நிலையில் உள்ளது. இந்த மருத்துவமனையில் மட்டும் 48 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளபட்டு வருகிறது.   இவர்களுக்கு உணவு, மருந்து வழங்க தற்போது 3 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற செவிலியர்களே இதனை இயக்க உள்ளனர். தேவைக்கேற்ப ரோபோக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். இதேபோல், திருச்சி அரசு மருத்துவமனையில் 5 ரோபோக்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் டீன் பாலாஜி, நிலைய மருத்துவ அதிகாரி ரமேஷ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: