கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டம் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: அமெரிக்க மக்களிடம் மன்றாடும் டிரம்ப்

வாஷிங்டன்: ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கியமான கட்டம் இது. அடுத்த 4 வாரத்திற்கு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டு மக்களிடம் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தீவிர நிலையை எட்டி உள்ளது. தொடர்ந்து 3வது நாளாக நேற்று முன்தினமும் அங்கு 968 பேர் பலியாகி உள்ளனர். நோய் பரவும் வேகம் தீவிரமாக இருப்பதால், தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, நாட்டில் 90 சதவீத  பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவலை தடுக்க, 33 கோடி அமெரிக்கர்களில்  30 கோடி பேர் வீடுகளில் முடங்கி உள்ளனர். அங்கு, வரும் 30ம் தேதி வரை சமூக  கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் தினந்தோறும் பேட்டி அளித்து வரும் அதிபர் டிரம்ப் நேற்று முன் தினம் தனது பேட்டியில், ‘‘கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளோம். எனவே அடுத்த 30 நாட்களும் வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து மக்களும் சமூக கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நீங்கள் செய்யும் இத்தகைய தியாகங்களின் மூலம் ஏராளமான அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்ற முடியும், ஆபத்திலிருந்து நாம் விடுபடவும் முடியும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, கொரோனா பாதிப்புள்ள பிரேசில் அதிகாரிகளுடன் கைகுலுக்கியதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் 2வது முறையாக மீண்டும் பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு நோய் தொற்று பாதிப்பில்லை என உறுதியானது. முதல் பரிசோதனையிலும் அவருக்கு நோய் தொற்று பாதிப்பில்லை என்றே வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை தடுப்பது கைக்குட்டையா? மாஸ்கா?

அமெரிக்காவில் வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து, அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமா? என்பது பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகை நேற்று அளித்த விளக்கத்தில், ‘‘மாஸ்க் மட்டுமே ஒருவரை வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றி விட முடியாது. அனைத்திற்கும் மாஸ்க் ஒன்றே மாற்றாகி விட முடியாது. சமூக இடைவெளி உள்ளிட்ட சமூக கட்டுப்பாடுகள், கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களே முக்கியமானவை. அவற்றை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. அதே போல அதிபர் டிரம்ப்பும், ‘‘மருத்துவ பணியாளர்களுக்கே மாஸ்க் அத்தியாவசியமானது. எனவே, அவர்களுக்கு மாஸ்க் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மக்கள் கைக்குட்டையின் மூலம் வாய், மூக்கை மூடிக் கொள்ளலாம்,’’ என்றார்.

பலி எண்ணிக்கை 6,000:

அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த பலி எண்ணிக்கை 6,070 ஆக நேற்று முன்தினம் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரமாக உள்ளது.

ரஷ்யாவுடன் சமரசமா?

ரஷ்யாவுக்கு நேர் எதிர் கொள்கைகள் கொண்ட நாடு அமெரிக்கா. எந்த விஷயத்திலும் இரு நாடுகளுக்கு ஒத்துப்போகாது. இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா பலி அதிகரிக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையான வென்டிலேட்டர், முக கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பல்லாயிரம் டன் கணக்கில் வழங்கி ரஷ்யா உதவி செய்து வருகிறது. இது ரஷ்யாவுடன் சமரசமாக போவதற்கு வழிவகுத்து விடுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ‘‘இல்லை. இது ரஷ்யா உடனான நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ரஷ்ய அதிபர் புடின் தரமான அவசியமான மருத்துவ உபகரணங்களை வழங்குவதாக மிகச்சிறப்பான உதவி செய்ய முன்வந்தார். அதை மறுக்க முடியவில்லை. அதனால் ஏற்றுக் கொண்டோம். மற்றபடி வேறெந்த காரணமும் இல்லை,’’ என்றார்.

சீனாவில் பலி எவ்வளவு? களம் இறங்கியது சிஐஏ

கொரோனாவால் தங்கள் நாட்டில் 3,300 பேர் இறந்ததாக சீனா அதிகாரப்பூர்வமாக கூறி வரும் நிலையில், இந்த எண்ணிக்கையின் மீது ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா சந்தேகத்தை கிளப்பி வருகிறது. சீனா தந்த கணக்கை நம்ப முடியாது என அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர் ஓ பிரையன் அளித்த பேட்டியில், ‘‘சீனாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை உறுதிபடுத்த எந்த வழியுமில்லை. ஆனால், அந்நாட்டின் சமூக வலைதளங்கள் வாயிலாக வரும் தகவல்களை வைத்து பார்த்தால், அரசு தரப்பில் கூறும் எண்ணிக்கை மிக மிக குறைவானது என்பது நிச்சயமாகிறது’’ என்றார்.

அதேபோல், இந்திய வம்சாவளி அரசியல் தலைவரான நிக்கி ஹிலேயும், ‘‘சீனா கூறும் எண்ணிக்கை நிச்சயம் துல்லியமானதாக இருக்காது,’’ என்றார். இதற்கிடையே, சீனாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்து அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தீவிரமாக தகவல் சேகரிப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்பத்திலேயே இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்று கூறியிருந்தால், நாங்களும் ரொம்ப அலர்ட்டா இருந்திருப்போம் என்பதுதான் அமெரிக்காவின் வாதம்.

Related Stories: