கொரோனா பரவல் எதிரொலி: தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3963 கைதிகள் ஜாமினில் விடுதலை

சென்னை: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3963 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், 30 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர். இந்நிலையில் சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறைகளில் கைதிகள் கூட்டமாக ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு கொரோனா தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், இதனால் சிறிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள விசாரணைக் கைதிகளை ஜாமினில் வெளியே அனுப்பலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை, கடந்த 10 நாட்களில் 3,963 சிறைக்கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்ட 50 சதவீதம் பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் சென்னை புழல் சிறையிலிருந்து 200 கைதிகள் ஜாமினில் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

Related Stories: