×

மகப்பேறு, டயாலிசிஸ், நரம்பியல் தொடர்பான சிகிச்சைகளை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து : தமிழக அரசு உத்தரவு

சென்னை : மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சைகளை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. டயாலிசிஸ், கீமோதெரபி தொடர்பான அத்தியாவசிய சிகிச்சைகளையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.சில சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக புகார் எழுந்ததால் தமிழக அரசு  இத்தகைய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு தற்போது வரை 309ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு பயந்து சில சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பேறுகாலப் பின் கவனிப்பு, டயாலிசிஸ், கீமோதெரபி, நரம்பியல் நோய்க்கான மருத்துவம் ஆகியவற்றை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தச் சேவைகளை வழங்க மறுப்பது முறையற்றது எனவும், மருத்துவக் கவுன்சிலின் விதிகளுக்கு எதிரானது எனவும் சுகாதாரப் பணிகள் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக வருவோருக்கு மேற்கண்ட சேவைகளை வழங்க மறுக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.அரசின் இந்த அறிவுறுத்தலை மதிக்காவிட்டால், உரிய சட்ட விதிகளின்படி மருத்துவமனையின் பதிவு ரத்துசெய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனிடையே வளர்ப்பு பிராணிகளில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவ எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதனால் வளர்ப்பு பிராணிகளை யாரும் கைவிட வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Tags : hospitals ,Government ,Govt , Maternity, Dialysis, Neurology, Therapy, Private, Hospital, Accreditation, Cancellation, Government of Tamil Nadu
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான...